twitter
    தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி

மள்ளராய் மன்னராய் ஆண்ட இனம் இன்று பள்ளராய், தாழ்த்தப்பட்டோராய் தமிழகத்தில் தரம் தாழ்ந்து கிடக்கிறது. "ஏரும், போரும் எங்கள் வாழ்வே" என  மங்காத புகழொடு வாழ்ந்த மள்ளர் இனம், கல்வி, கலாச்சார,  பொருளாதார காரணிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு  வருகிறது. பெரும்பான்மை சமூகமான மள்ளர் இனத்திற்கு, அரசியல் அதிகாரமோ அறவே மறுக்கப்பட்டு வருகிறது. காலத்தை  பிரதிபலிக்கும் கண்ணாடியான வரலாறோ, இம் இன மக்களின் உண்மையான  வரலாற்றை இருட்டடிப்பு செய்திருக்கிறது. அனைத்திற்கும்  மகுடம் வைத்தாற்போல், பத்திரிக்கை துறையோ இச்சமூகத்தின்  நிகழ்ச்சிகளுக்கும், எழுச்சிகளுக்கும் அதன் பாராமுகத்தையே  தொடர்ந்து பரிசாக தந்து கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 11 - "பாண்டியன்களால்", "சாமியால்", "அண்ணாமலையால்", "ராஜனால்" மற்றும் இன்ன பிற அமைப்புகளால் பிரிந்து கிடக்கும் தேவேந்திர  மக்களை இமானுவேல் சேகரன் எனும் பெயர் இணைக்கும் நாள். உரிமைக்கு குரல் கொடுத்து, ஆதிக்க சாதி வெறிக்கு அடங்க மறுத்து, தன்  இன்னுயிரை இமானுவேல் சேகரன் ஈந்த நாள். அரசியல் மற்றும் பூகோள ரீதியாக சிதறிக் கிடக்கும் எம் இன மக்களை பரமக்குடியில் சேர்க்கும் நாள்.  இத்தனை சிறப்பிற்கும் உரிய இந்த நாளின் நிகழ்ச்சிகள், பத்திரிக்கைத் துறையின் பாராபட்சம் காரணமாக அச்சேற மறுக்கிறது. பத்திரிக்கைத் தர்மம் என்பது பாரபட்சமன்றி செய்திகள் வெளியிடுவது தான் என்பது எப்படி இவர்களுக்கு தெரியாமல் போனது!

செய்திகளுக்கு பத்திரிக்கை என்ற நிலையில் இருந்து விளம்பரத்திற்கு இடையே செய்திகளையும் அதுவும் விளம்பரம் கொடுப்பவர்களின் செய்திகளை மட்டும் பிரசுரிக்கும் அவல நிலைக்கு ஆளாகி உள்ள முன்னனி நாளிதழ்களும், முத்தக்காட்சி செய்திகளுக்கு முதலிடமும், முக்கியத்துவமும் தந்து படத்துடன் செய்தி வெளியிடும் பத்திரிக்கைளும் ஆக்கிரமுத்துள்ள தமிழ் பத்திரிக்கைத் துறை உலகில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்த ஒற்றைக் காரணத்திற்காகவே கொல்லப்பட்ட ஒரு மாவீரனின் நினைவஞ்சலி நிகழ்வுகளை அச்சில் ஏற்றுவதில் இவர்களுக்கு என்ன அவலம் வந்து விடப் போகிறது. நடிகைகள் வழுக்கி விழுவது நான்கு பத்தி செய்திகளாக படத்துடன் பிரசுரிக்கும் நாளிதழ்களுக்கு, ஒரு சுதந்திரப்போராட்ட தியாகியும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியுமான இமானுவேல் சேகரன் நினைவு நாள் செய்திகளுக்கு இரண்டு பத்திகளுக்கு மேல் இடமில்லையா? அல்லது மனமில்லையா? மேலும் "வீடுகள் சூறை" என்றும், "போலீசார் தாக்கப்பட்டனர்" என்றும், "பரமக்குடியில் திடீர் பதட்டம்" என்றும் சொல்லி வைத்தாற் போல் அனைத்து ஏடுகளும் ஒரே மாதிரியாக பதறியிருக்கின்ற்ன. ஆனால் அஞ்சலி செலுத்த சென்ற வாகனங்கள் சில இடங்களில் கல் வீச்சு தாக்குதலுக்கு ஆளான செய்தியை மட்டும் அனைத்து நாளிதழ்களும் வசதியாக மறந்து விட்டன.

தீண்டாமை ஒழிப்பிற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக கூறிக் கொள்ளும் கம்யூனிச பத்திரிக்கையான "தீக்கதிர்", "பாரதி உருவப்படத்திற்கு என். வரதராஜன் மரியாதை" என்ற செய்தியை படத்துடன் நான்கு பத்தி செய்தியாக வெளியிட்டிருக்கும் வேளையில், இமானுவேல் சேகரன் குருபூஜை செய்திகளை முதல் பத்தியிலே முடக்கியது ஏன்? அதுவும் ஆறாம் பக்கத்தில்! இது ஒரு புறம் இருக்க, "விரகனூர் பகுதியில் பேருந்து நிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி" என்றும் "தேவர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு" என்று நடுநிலை நாளிதழ் எனக் கூறிக் கொள்ளும் திணமனி செய்தி வெளியிடுகிறது. இது போன்ற செய்திகள் தேவேந்திர இன மக்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் முயற்சியாக கருதப்படும் என்பது திணமனிக்கு தெரியாதா?

செய்திகள் வெளியிடுவதில் தான் பத்திரிக்கைகளின் பாராபட்சம் தொடர்கிறது என்றால் வெளியிட்ட செய்தியிலும் பாரபட்சம் என்பது தான் வேதனைக்குரியது. தி.மு.க உள்ளிட்ட திராவிடக் கட்சிகளும் புதிய தமிழகம் உள்ளிட்ட தலித் கட்சிகளும் அமைப்புகளும் அஞ்சலி செலுத்தின என சிறிய அளவிலாவது செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள் தேசியக் கட்சியும் உத்திரப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியுமான பகுஜன் சமாஜ் கட்சி அஞ்சலி செலுத்திய செய்தி மட்டும் அனைத்து நாளிதழ்களிலும் இடம் பெறவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை. மற்ற தேசியக் கட்சிகளான காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்களும் பாரதிய ஜனதாவின் மாநிலச் செயலாளரும் அஞ்சலி செலுத்தியதாக செய்தி வெளியிட்டிருக்கும் தினத்தந்திக்கும் தினமலருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியச் செயலர் ஒருவரே நேரில் அஞ்சலி செலுத்தியது தெரியவில்லையா? இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அக்கட்சியின் மாநில முதன்மைப் பொதுச் செயலாளர் திரு.இ.பா. ஜீவன்குமார் தலைமையில் தேசியச் செயலர் திரு. சுரேஷ் மானே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.குறில் மற்றும் தமிழக தலைவர் திரு. ம்ஷ்ட்ராங்க் உள்பட ஆயிரக்கணக்கானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பது தான். அல்லது அவ்வாறு செய்தி வெளியிட்டால் தேவேந்திர சமூக மக்கள் அக்கட்சியின் பின்னால் திரண்டு விடுவார்கள் என்ற எண்ணம் கூட இதற்குப் பின்னால் இருக்கலாம். (அது தான் உண்மையும் கூட.)

"ஏற்றமுறச் செய்வதும், மாற்றமுற வைப்பதும் ஏடேயாகும்" என்பார் பாரதிதாசன். ஆண்டுகள் பல காலமாக அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கும் இந்த இனத்தை ஏற்றமுறச் செய்யாவிடினும், இந்த இனத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் எழுச்சிகளை இருட்டடிப்பு செய்யாமல் இருந்தாலே போதும். அவ்வாறு இருந்தாலே அரசு, நிர்வாகம், மற்றும் நீதி துறைகளுக்கு அடுத்ததாக, நான்காவது தூணாக பத்திரிக்கை துறை திகழ்கிறது என்ற நம்பிக்கையும் நிலைத்திருக்கும்.பத்திரிக்கைத் துறையின் பாராமுகமும், பாரபட்சமும்

0 comments:

Post a Comment