twitter
    தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞாலம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்" என்று பாரதி அன்று பாடியது இன்று தேவேந்திர இன மக்களுக்கு தான் கன கச்சிதமாக பொருந்தியிருக்கிறது போலும். தி.மு.க தேவேந்திரனாக, அ.தி.மு,க தேவேந்திரனாக, ம.தி.மு.க தேவேந்திரனாக, பா.ம.க தேவேந்திரனாக, தே.மு.தி.க தேவேந்திரனாக, காங்கிரஸ் தேவேந்திரனாக மற்றும் திருமாவளவன் தேவேந்திரனாக(!) பிரிந்து கிடக்கும் எம் இனச் சொந்தங்களுக்கு நல்லது எது, நல்ல தலைமை எது, நமக்கான தலைமை எது? என்று தெரிய வேண்டியது அவசியமாகிறது. இந்த அடிப்படை எல்லா தேவேந்திரர்களுக்கும் தெரிந்து விட்டாலே, வேறு எதுவும் அவர்களுக்கு தேவையில்லை தான்.

அரசியல அதிகாரமே ஒரு இனத்தின் உண்மையான விடுதலைக்கு அடிப்படையாக அமைய முடியும் என்பதும், அதுவே சமூக, கல்வி, பொருளாதார காரணிகளில் ஒரு இனத்தை முன்னேற்றமடையச் செய்யும் என்பதும் கடந்த காலம் நமக்கு காட்டும் வரலாறு. கடை நிலைச் சமுதாயமாக இருந்த நாடார் இனம் இன்று அரசியல், பொருளாதார, சமூக நிலைகளில் முதன்மைச் சமூக்மாக முன்னேறியிருப்பதற்கு காமராசர் எனும் நாடார் தமிழ் நாடாண்டார் என்பதே காரணமாக இருக்க முடியும். தென் தமிழகத்தின் சில பகுதிகளிலே கணிசமாக காணப்படும் இம்மக்கள் ஆட்சி, அதிகாரம் உட்பட அனைத்தையும் அனுபவித்து வரும் நிலையில், தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பரவிக் கிடக்கும் பெரும்பான்மைச் சமூகமான தேவேந்த்திர மக்களுக்கு அரசியல் அதிகாரம் மறுக்கப்படுவதன் காரணம் என்ன என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. வினாவிற்கு விடை காண்பதும் காலத்தின் கட்டாயமாகிறது.

ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. 70களில் கீழ் வெண்மணியில் தேவேந்திர மக்களின் மீது பற்ற வைக்கப்பட்ட நெருப்பு, 80களில் உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவராக உருவெடுத்து நிற்கிறது. 90களில் கண்டதேவி தேர், தேவேந்திரர் கை பட்டால் ஓட மறுத்தது, மறுக்கிறது. அரண்மனைகளும், ஜமீன்களும் இன்றளவும் அடக்கியாள நினைக்கிறது. உரிமைக்கு குரல் கொடுத்து போராடினால் காவல்துறையின் தோட்டாக்கள் தேவேந்திர உயிர்களையே குறி வைக்கிறது. நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பணியிடை நீக்கம் பரிசாக வழங்கப்படுகிறது. முருகன் கொலை தற்கொலையாக மாற்றப்படுகிறது. இந்த பட்டியல் இன்னும், இன்றளவும் நீள்கிறது. இதன் எல்லாவற்றிற்கும் தேவேந்திரர்களுக்கான அரசியல் தளமோ, அதிகாரமோ இல்லை என்பது தான் காரணம் என்பதும் தெளிவாகிறது.

இமானுவேல் சேகரன் - அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளச் சின்னம். உரிமைக்கு குரல் கொடுத்ததற்காகவே உயிர் பறித்தது ஆதிக்க சாதி வெறி பிடித்த ஒரு கூட்டம். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக விளங்கிய இந்த தியாகியின் நினைவிடத்திற்கு, எத்தனை முறை கருணாநிதியும், ஸ்டாலினும், அழகிரியும் வ்ந்தனர் என்பதை தி.மு.க தேவேந்திரனும், ஜெயலலிதா எத்தனை முறை வந்தார் என்பதை அ.தி.மு.க தேவேந்திரனும் சிந்திக்க வேண்டும். சிவகங்கை செல்லும் இவர்கள், பரமக்குடியை பார்க்க மறுப்பதேன்? அக்டோபர் 30 அவர்களுக்கு நினைவில் இருக்கும் போது செப்டம்பர் 11 மட்டும் அவர்கள் சிந்தையில் மறப்பது ஏன்? பரமக்குடி தமிழகத்தின் எல்லைக்குள் இல்லையா?

காரணம் ஒன்று தான். தேவேந்திரன் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., காங்கிரஸ் என்றும் பிரிந்தும், சிதறியும் கிடப்பது தான். அனைத்து தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் தேவேந்திரர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்ப்ப்து தான். மேலும் தேவேந்திரர்களுக்கான அரசியல் தளமோ, அதிகாரமோ இல்லை என்பது தான். அதனால் தான் உத்தப்புரத்தில் 500 குடும்பங்களை கொண்ட பிள்ளைமார் சமூகம், 600க்கும் அதிகமான குடும்பங்களை கொண்ட தேவேந்திர இனத்தை தீண்டாமைச் சுவற்றுக்குள் அடக்கி வைத்திருக்கிறது. தம்மிடையே பிளவுகள், பிரிவுகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான எதிரான வன்முறைகளில் மட்டும் அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றினைந்து விடுகின்றனர் என்ற அம்பேத்கரின் உண்மை மொழி உத்தப்புரத்திற்கும் பொருந்தியிருக்கிறது. முதல்வராக உள்ள கருணாநிதியோ உத்தப்புரத்தை உத்தமபுரமாக்குவேன் என்று வாய் ஜாலம் பேசுவதோடு நின்று விடுகிறார். (படிக்க: உத்தப்புரம்: தேவேந்திரரின் அவமானச் சின்னம்). தி.மு,க அமைச்சரவையில் தேவேந்திர இன சமூகத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடமில்லை. அந்த அமைச்சரும் அழகிரிகளின் கட்டுப்பாட்டிலும், மூர்த்திகளின் கண் அசைவிலுமே பணியாற்ற வேண்டியிருக்கிறது.

அருந்ததியினருக்கு மூன்று சதவிகிதம் உள் ஒதுக்கீடு என்பது தேவேந்திர இன மக்களை அரசு வேலைவாய்ப்புகளில் பின் தங்கச் செய்வதற்கான கருணாநிதியின் சூழ்ச்சி என்பது எத்தனை தேவேந்திரருக்குத் தெரியும்? இந்த உள் ஒதுக்கீடு அரசியல் சாசன விதிமுறைகளுக்கு முரணானது என்று தேசிய ஆதிதிராவிட நல ஆணைத்தின் துணைத் தலைவரான காம்ளே கூறினால் உடனே மன்மோகனுக்கு கடிதம் எழுதுகிறார். மன்மோகனும் காம்ளே கருத்திற்கு மெளனம் சாதிக்கிறார். மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும் என்ற தேவேந்திரர்களின் கோரிக்கைக்கு மெளனம் சாதிக்கும் கருணாநிதி, முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முந்தியடித்துக் கொண்டு பரிசீலிப்பதாக சொல்கிறார். மத்திய அரசிற்கு பரிந்துரையும் செய்கிறார். இப்படி செய்வதற்கு தேவேந்திரர்கள் அவருக்கு இளிச்சவாயர்களாகத் தெரிந்திருக்க வேண்டும்!

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அதிகாரி விவகாரத்தில் ஒரு படி மேலே போய் தேவேந்திர இன மக்களுக்கு எதிரான நிலையை எடுத்திருக்கிறார் கருணாநிதி. தலித் கிறிஸ்தவரான உமாசங்கர் தலித் இந்துவாக சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்துள்ளதாக இருபது ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்திருக்கும் கருணாநிதி, அதையே காரணம் காட்டி பணியிடை நீக்கமும் செய்துள்ளார். இந்து ஆதி திராவிட மக்களைப் போன்றே, மதம் மாறிய ஆதி திராவிட மக்களுக்கும் சலுகைகள் வ்ழங்கப்பட வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையாக இருந்து வருகிறது மன்மோகனுக்கும் கடிதம் எழுதுகிறார். ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், உமாசங்கர் ஒரு தலித் கிறிஸ்தவராக இருந்தாலும், அவரை பணியிடை நீக்கம் செய்தது அவர் கழகத்தின் கொள்கைக்கு எதிரானது என்பது எப்படி கருணாநிதிக்கு தெரியாமல் போனது? உமாசங்கர் ஒரு தேவேந்திரர் என்பதால் தெரியாமல் போனதா? இன்று தூத்துக்குடி நுகர்பொருள் வாணிபக் கிடங்கின் தர ஆய்வாளர் (உதவி) முருகன் மர்மான முறையில் இறந்திருப்பதும் இந்த ஆட்சியின் தேவேந்திர விரோதப் போக்கின் அடையாளமாகத் தானே காண முடியும்.

அ.தி.மு.க வைப் பற்றி கவலைப்ப்டத் தேவையில்லை. ஏனெனில் அது கள்ளர் இன மக்களின் கட்சி என்பது ஜெயலலிதா உள்பட அனைவருக்கும் தெரியும். பார்ப்பன கட்சியான பாரதிய ஜனதாவைப் பற்றியும் நமக்கு கவலையில்லை.

கொள்கைக்காக கூட்டணி என்பது போய் கூட்டணி மாறுவதையே கொள்கையாக வைத்துக் கொண்ட ராமதாசின் சாயமும் சமீபத்தில் வெளுத்திருக்கிறது. வன்னியரைத் தவிர எந்த சாதிக்காரனும் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பென்னகரத்தில் வாய்ச் சவடால் பேசிய ராமதாஸ், மதுரை மாவட்டம் மேலூரில் தேவர் இன பாதுகாப்பு பேரவை நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு "முக்குலத்தோருக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்க உறுதுணையாக இருப்பேன்" என்றும் "வரும் சட்டசபை கூட்டத் தொடரில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்படும்:" என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறார். அதே சமயத்தில் வடிவேல் ராவணனை மாநிலப் பொதுச் செய்லாளராக நியமித்து "வடக்கே வன்னியன், தெற்கே தேவேந்திரன்" என்றும் சொல்வார். இப்படி இரட்டை வேடம் போடும் ராமதாஸை தேவேந்திரர்கள் எப்படி நம்ப முடியும் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் சிந்திக்க வேண்டும். தேவரின பாதுகாப்பு பேரவை கூட்டத்திற்கு மேலூர் வரும் ராமதாஸ், தேவேந்திர இன தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு இதுவரை வராதது ஏன்? இதற்கு பா.ம.க தேவேந்திரர்களின் பதில் என்ன?

நேற்றைய் மழையில் இன்று முளைத்த காளான் நாளைக்கே ஆட்சிக்கு வர விரும்புகிறது. அதற்கு தேவேந்திர இளைஞர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. கேப்டன் என தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர், அனைத்து மக்களுக்கான கட்சி தான் தே.மு.தி.க என்று கூறிக் கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கே இவர் கட்சியில் கரிசனம் கிடைக்கும். தேவர் ஜெயந்தி வந்தால் தனது ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் தேவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய விஜயகாந்த், இமானுவேல் சேகரன் படத்திற்கு இதுவரை ஒருமுறை கூட மலர் தூவி மரியாதை செலுத்த வில்லை என்பது எத்தனை தே.மு.தி.க தேவேந்திர இளைஞர்களுக்குத் தெரியும்? ரசிப்பது என்பது வேறு; ஒருவரின் தலைமை ஏற்று நடப்பது வேறு என்பதை எப்போது என் இன சமூக இளைஞர்கள் உணர்வார்கள்?

அனைத்து மக்களுக்கான கட்சி என்று சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் ஆரம்பித்தாலும், அவர் ஒரு நாடார் என்ற காரணத்தினாலே அதன் பின்னர் நாடார் இன மக்கள் அனைவரும் அணி திரளுகினறனர். அதை ஒரு நாடார் கட்சியாக மாற்றுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் அங்கு தேவேந்திர இன மக்களுக்கு வேலை இல்லை.

"சுயமரியாதையுள்ள எவனும் காங்கிரசுடன் ஒத்துழைக்க முடியாது" என்றார் அண்ணல் அம்பேத்கர். தேவேந்திரகள் சுயமரியாதைக்காரர்கள். ஆகையால் அவர்கள் காங்கிரசில் இருத்தல் ஆகாது. காங்கிரசின் முகமூடி தான் அண்ணலின் காலத்திலேயே கிழிந்தாயிற்று. பட்டியல் இன மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, காமன்வெல்த் போட்டிகளுக்கு பயன்படுத்திய காங்கிரசின் போக்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தான். தலித் மக்கள் இன்றி காங்கிரஸ் முழுமை பெற முடியாது என்று தமிழக காங்கிரசில் தனி ஆவர்த்தனம் செய்ய விழையும் சிதம்பரம் கூறுவது தென் பகுதியில் தேவேந்திர இன ஓட்டுகளை குறிவைத்து தான் என்பது அரசியல் அறிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் தேவேந்திரர்கள் சசுயமரியாதைக்காரர்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா?

இரண்டு, மூன்று தொகுதிகளுக்காக இனத்தை அடமானம் வைக்க காத்திருக்கும் இனத் தலைவர்களைப் பற்றியும், கொடியங்குளம் வன்முறைச் சம்பவத்தை நிகழ்த்திய கட்சியுடன் கூட்டணிக்கு விழையும் தலைவர் பற்றியும் எம் இனச் சொந்தங்கள் தான் சிந்திக்க வேண்டும்.

தேவேந்திர இன மக்களிடம் சிறப்பாக நடித்து தொடர்ந்து அவர்களை ஏமாற்றி வரும் கட்சிகளுக்கு ஆஸ்கர் விருது என்று அறிவித்தால் திராவிடக் கட்சிகளோடு, தேசியக் கட்சிகளும் போட்டியிடும். இரண்டு கட்சிகளுமே விருதுகளையும் வெல்லும், தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் தவிர! மேலும் பகுஜன் தலைமையின் கீழ் ஒன்று பட்டால் தேவேந்திரர்களுக்கு உண்டு வாழ்வு. ஏன், எப்படி என்பதை இனி வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.

0 comments:

Post a Comment