twitter
    தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி

"பட்டியல் இன மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறிக் கொள்ளும் தமிழக அரசால், அத்திட்டங்கள் எப்படி பயன்படுத்தப்பட்டது. எவ்வளவு பேர் பயன் பெற்றனர் போன்ற புள்ளி விவரங்களைத் தர முடியவில்லை. அரசு ஊழியர்களில் பட்டியல் இன மக்கள் எத்தனை பேர், எத்தனை பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது, காலியிடங்கள் எத்தனை, பள்ளி, கல்லூரிகளில் என்ன நிலை என்ற விவரங்களும் மாவட்ட வாரியாகவோ, துறை ரீதியாகவோ இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பணியாளர் சங்கம் மற்றும் அரசுக்குமிடையே கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தொடர்பு அதிகாரி இருப்பார். அது போன்று அதிகாரி இங்கு இல்லாததால், தகவல் பரிமாற்றம் சரியாக இல்லை என்று கருதுகிறேன். பிற மக்கள் ஆக்கிரமித்துள்ள இடங்கள் தான் பல இடங்களில் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்பது தொடர்பாக 8 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன." - இப்படிக் கூறியது கூலி வேலையை பிழைப்பாகக் கொண்ட குப்பனோ, சுப்பனோ அல்ல. பட்டியல் இனமக்களுக்கான நலத்துறையின் துணைத்தலைவரான திரு.காம்ளே அவர்களே, கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசின் மீதான குற்றச்சாட்டு தான் மேற்கூறியது.

1982ம் ஆண்டு லண்டன் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் பட்டியல் இனமக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில், தமிழக அரசின் நில நிர்வாகத்துறை ஆணையர் வெளியிட்ட ஆவணங்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் தற்போது வெறும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 111 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 10 லட்சத்து 73 ஆயிரத்து 887 ஏக்கர் நிலம் எங்கே போனது? என்ன ஆனது?  தற்போது ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த தலித்களின் சம்பந்தி இந்த விஷயத்தில் இது வரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டது என்றால் மட்டுமே விசாரணைக்கமிஷன் அமைப்பாரோ இந்த தலித்களின் சம்பந்தி? மேலும், இந்த தலித்களின் சம்பந்தியின் ஆட்சியில் தான், வேலியே பயிரை மேய்ந்தது போல, பஞ்சமி நிலங்களை ஆர்ஜிதம் செய்யக்கூடாது என்ற விதியை மீறி அரசே பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமித்துள்ளது. அது சரி, ஆட்சி அதிகாரம் நம் கைகளில் வரும் வரை, இதை விதியென்று நொந்து கொள்வதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்.

குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, மாநில முதல்வரை தலைவராகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கென்றே தனியாக ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையில், தலித்களின் சம்பந்தியான கருணாநிதி ஆட்சி புரியும் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மட்டுமே தனியாக நீதிமன்றங்கள் அமைந்துள்ளன என்ற விஷயம் எப்படி அவருக்கு தெரியாமல் போனது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பெயரைச் சொல்லி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்து, தன்னை பெரியாரின் பிள்ளை என்றும், அண்ணாவின் தம்பி என்றும் கூறிக் கொள்ளும் இந்த தலித் சம்பந்தியின் ஆட்சியில் தான், வன்கொடுமை நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் ஐந்தாவது இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தான், "வன்கொடுமை வழக்குகளில், தண்டனை விகிதம் மிகக் குறைவாக உள்ளது. தமிழகத்தில் இதற்கென சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்" என்ற பட்டியல் இனமக்களுக்கான நலத்துறையின் துணைத்தலைவரான திரு.காம்ளே அவர்களின் வேண்டுகோளும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே கருணாநிதி காதில் விழுந்திருக்கிறது. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை கனிவோடு பரிசீலிக்கும் கருணாநிதிக்கு, திரு. காம்ளே அவர்களின் வேண்டுகோள் மட்டும் எட்டிக்காயாய் கசப்பது ஏனோ? கம்யூனிஸ்டுகள் குற்றச்சாட்டுக்களுக்கு மேற்குவங்காளம், கேரளா போன்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு உடனடியாக புள்ளி விவரங்களை இந்த "தலித் சம்பந்தியான" கருணாநிதி, திரு.காம்ளே அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அளித்த பதில் என்ன? தேவேந்திர விரோதப் போக்கு என்பது தானே திராவிடக் கட்சிகளின் இது நாள் வரை கொள்கையாக இருந்து வருகிறது. அ.தி.மு.க தேவேந்திர மக்களுக்கு எதிரி என்றால், தி.மு.க-வின் கருணாநிதி எம் இன மக்களின் துரோகி என்ற வித்தியாசத்தை தவிர வேறொன்றுமில்லை.

பட்டியல் இன மக்களிடையே பகையை உண்டாக்கவும், தேவேந்திர மக்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கும் விதமாகவும் தானே அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை, பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பெயர் பெற்ற கருணாநிதி தற்போது எடுத்திருக்கிறார். இது தி.மு.க கரை வேட்டி அணிந்த எத்தனை தேவேந்திர கைத்தடிக்களுக்குத் தெரியும்? ஐம்பதாயிரம் மக்களுக்கும் குறைவான கருணாநிதியின் சமூகம் இன்று ஆண்டு கொண்டு, எண்ணிக்கையில் கோடியைத் தொடும் எம் இனமக்களை அடிமைப்படுத்தி, தேவேந்திர விரோதப்போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருகிறது என்று சொன்னால் அதற்கு தி.மு.க-விற்கு வாக்களிக்கும் தேவேந்திர மக்களின் பங்கும் அதில் இருக்கிறது என்பது தானே உண்மை. எட்டு சகவிகத ஓட்டுகளைக் கொண்ட விஜயகாந்த் ஆட்சி அமைக்க முயற்சிக்கும் போது, ஏறத்தாழ இருபது சகவிகித மக்கள் தொகையைக் கொண்ட தேவேந்திர இனம் இன்றளவும் ஆட்சி அமைக்க முடியாமல் போவதற்கு, எம் இனச் சொந்தங்கள் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் தொடர்ந்து வாக்களிப்பது தானே காரணமாக இருக்க முடியும்.

தி.மு.க-வின் தேவேந்திர விரோதப் போக்கின் மற்றொரு அடையாளமாக தூத்துக்குடியின் திரு.முருகன் அவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்ட போது அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சித்த நிலையில், உத்திரப்பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் திரு.பிரமோத் குரில் அவர்கள் நேரில் வந்து துக்கத்தில் பங்கெடுத்து திருமதி.செல்விக்கு ஆறுதல் கூறியது திரு.பிரமோத் குரில் உட்பட நாம் அனைவரும் அம்பேத்கரின் மக்கள் என்ற அடிப்படையில் தானே. உயர்நிலைப் பதவியில் உள்ள திரு.உமாசங்கர் அவர்களே தேவேந்திரர் என்ற காரணத்தால் திராவிடக் கட்சியான தி.மு.க-வால் பழிவாங்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து , பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பத் தயாரானதும், திரு.உமாசங்கர் அவர்களும் அம்பேத்கரின் மக்கள் என்ற அடையாளத்தைக் கொண்டவர் என்ற அடிப்படையில் தான். இனத்தின் பெயரைச் சொல்லி வாக்கு வாங்கி தேர்தலில் வெற்றி பெற்ற திராவிடக் கட்சிகளின் எத்தனை தேவேந்திர குல சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.உமாசங்கர் அவர்களின் பணியிடை நீக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்? அவர்களில் எத்தனை பேர் திருமதி.செல்விக்கு ஆறுதல் கூறவாவது தூத்துக்குடிக்கு வந்தனர்? இதை திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் தேவேந்திர சொந்தங்கள் தான் சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா?

தேவேந்திர முன்னேற்ற முன்னணி (DMM), தேவேந்திர அறிவுசார் குழுமமான (DEED) மற்றும் அகில இந்திய மள்ளர் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 10-10-2010 அன்று மதுரையில் உள்ள டீநோபில் மையத்தில் நடைபெற்றது. இதில் தேவேந்திர முன்னேற்ற முன்னணியின் நிறுவனரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மைச் செயலாளர் திரு. இ.பா.ஜீவன்குமார் அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் தலைவர் திரு. சீனிவாசன், இயக்குனர் திரு. தங்கராஜ், பொருளாலர் திரு. நாகராஜ் ஆகியோர்களும்,  தேவேந்திர முன்னேற்ற முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் திரு. அரங்கராஜன், மாநிலச் செயலாளர் திரு. மணிவண்ணன் ஆகியோரும், கில இந்திய மள்ளர் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் நிர்வாக இயக்குனர் திரு. புகழேந்தி அவர்களும் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து வந்த கல்வியாளர்களும், தொழிலதிபர்களும், தேவேந்திர முன்னேற்ற முன்னணியின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் பொருளாலரான திரு. நாகராஜன் அவர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவற்றைப் பற்றி விளக்கினார். இதைத் தொடர்ந்து திரு. ஜீவன்குமார் அவர்கள் தேவேந்திர முன்னேற்ற முன்னணி மேற்கொண்ட களப்பணிகளை பட்டியலிட்டதோடு, அது தேவேந்திர மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும், பெற்ற வரவேற்பையும் புகைப்படங்களோடு விவரித்தார். மேலும் தேவேந்திர விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வரும் தி.மு.க அரசின் முதல்வர் கருணாநிதி அவர்களால் திரு. உமாசங்கர் ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி மதுரை உட்பட பல்வேறு இடங்களில் நடத்திய போராட்டங்களையும், கருணாநிதியின் தேவேந்திர விரோதப் போக்கை கண்டித்தும், திரு. உமாசங்கர் ஐ.ஏ.எஸ் பணியிடை நீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் பாராளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை திரு. ஜீவன்குமார் நினைவு கூர்ந்த அதே வேளையில், அதற்கான வேலைகளை சிறப்பாக செய்த தூத்துக்குடி மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் திரு. செல்வம் அவர்களையும் பாராட்டினார். மேலும் திரு. உமாசங்கர் அவர்களின் பணியிடைநீக்கம் அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என்பதை பாராளுமன்றத்தில் வலியுறுத்தும் விதமாக, திரு. ஜீவன்குமார், திரு. செல்லப்பன் மற்றும் திரு. மணிவண்ணன் உள்ளிட்ட குழுவினர் பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிரமோத் குரில் அவர்களை டெல்லியில் நேராக சந்தித்ததும் ஆலோசனைக்கூட்டத்தில் நினைவுறுத்தப்பட்டது. மேலும் ஆதிதிராவிட நலத்துறை என்ற பெயரை பட்டியல் இனமக்களின் நலத்துறை என்று மாற்றக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிரமோத் குரில் அவர்கள் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தின் நகலும் ஆலோசனைக்கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து "ஆளும் வர்க்கம்" பற்றியும், அதன் சிறப்பம்சங்கள் எப்படி தேவேந்திர மக்களுக்கு பொருந்தியுள்ளது என்பது பற்றியும் திரு. இ.பா.ஜீவன்குமார் அவர்கள் விளக்கியது கல்வியாளர்களின் புருவங்களையும் ஆச்சரியத்தில் விரியச் செய்தது.

திரு. நாகராஜன் அவர்கள் தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் வரவு மற்றும் செலவுகளுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்பித்து விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் இயக்குனரான திரு. தங்கராஜ் அவர்கள் தெளிவான, தேவையான நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் தலைவர் திரு. சீனிவாசன் மற்றும் திரு. செல்லப்பன் ஆகியோர் உரை ஆற்றினர். அடுத்தபடியாக, தேவேந்திர முன்னேற்ற முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு. அரங்கராஜன் அவர்கள் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டியும், நிர்வாகிகள் நியமிக்க வேண்டியதைப் பற்றியும் விளக்கினார். மேலும் ஆலோசனக் கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வியாளர்களும், அரசு ஊழியர்களும், தொழிலதிபர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் பொருட்டு, ஒவ்வொருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக தேவேந்திர முன்னேற்ற முன்னனிக்கு என்று தலைமை அலுவலகம் ஏறத்தாழ 50-65 லட்சம் மதிப்பீட்டில் திருச்சியில் கட்டப்படும் என்ற அறிவிப்பும், தேவேந்திர முன்னேற்ற முன்னணிக்கு என்று செல்வி. உதயா செல்வி அவர்களின் http://deeddmm.webnode.com/ மற்றும் திரு. புகழேந்தி அவர்களின்  http://devendirarmunnetramunnani.blogspot.com/ என்ற ஆங்கில இணையதளங்களும், மேலூர் க.தனபாலன் அவர்களின் தமிழ் மொழியிலான http://dmm-tn.blogspot.com/  என மொத்தம் மூன்று இணையதளங்கள் (பிளாக்குகள்) அறிமுகம் செய்யப்பட்டது.  திரு. தனக்கோடி அவர்களை தலைவராக கொண்டு கட்டப்படும் இந்த தலைமை அலுவலகத்தின் அமைப்புகளையும், அதில் உள்ள வசதிகளையும் திரு. புகழேந்தி அவர்கள் தெளிவாக விளக்கினார்.

தேவேந்திர அரசு ஊழியர்கள் சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள தேவேந்திர மக்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு அவர்களை தத்தெடுக்க வேண்டும் என்ற திரு. காந்தி அவர்களைத் தொடர்ந்து, மாவட்டம் தோறும் தேவேந்திர மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியும், அதற்கான பணிகளை தேவேந்திர இளைஞர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை தூத்துக்குடியின் திரு. திருஞானம் அவர்கள் வைத்தார்கள். மேலும் தேவேந்திர மக்களின் நிகழ்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளும் வைக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்   கல்வியாளர்கள் திரு.பெரியசாமி, மருத்துவர் திரு. காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் திரு.தவமணி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் திரு.செல்வம் மற்றும் அலுவலகச் செயலாளர் திரு. லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

"தேசத்தின் தலையெழுத்து வகுப்பறையின் நான்கு சுவற்றிற்குள் தான் தீர்மானிக்கப்படுகிறது" - பேராசிரியர் ஈ.ஸ். கோத்தாரி அவர்களின்  தலைமையிலானை இந்திய கல்விக் குழுவின் 700 பக்க அறிக்கை இப்படித் தான் துவங்குகிறது. இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்க வல்ல  கல்வி நிச்சயம் நம் இனத்தின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் வல்லமை உடையது என்பதில் எவரும் எள் முனையளவு கூட மாற்றுக் கருத்து  கொள்ள முடியாது. ஒருவனின் அளிக்கப்படும் கல்வி என்பது அவனின் அடுத்ததடுத்த தலைமுறைக்கு அளிக்கப்படும் கல்விக்கு சமம். அதனால் தான்  அண்ணல் அம்பேத்கரும் "விடுதலைக்கு முதற்படி அறிவு; அறிவே செயலின் தொடக்கம்; அந்த அறிவிக்கு அடிப்படை க்ல்வி" என்ற உண்மையை  அறிந்திருந்த காரணத்தினால் தான் ஒடுக்கப்பட்ட மக்களில் சிந்த்னையாளர்களை உருவாக்கும் பொருட்டு மராத்வாடா பகுதியில் ஒரு கல்விக்  கழகத்தை நிறுவவும் முயன்றார். அப்படி மகத்துவம் வாய்ந்த கல்வி அறிவு என்பது அனைத்து இளைய தேவேந்திர மக்களும் கிடைப்பதை உறுதி  செய்ய வேண்டியது ஒவ்வொரு தேவெந்திர கல்வியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் கடமையாகும்.

அரசாங்க இயந்திரம் என்பது அரசு, நிர்வாகம், மற்றும் நீதி துறைகளின் என்ற அடிப்படையிலே இயங்குகிறது. மக்களுக்கான திட்டங்களையும்,   சட்டங்களையும் அரசு துறை தீட்டுகிறது என்றால, தீட்டப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் நிர்வாகத்துறையும், ம்க்களுக்கான அடிப்படை  உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நீதித்துறையும் தத்தமது பணிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், அரசியல் அனாதைகளாக ஆக்கப்பட்டு, வெறும் வாக்களிக்கும் இயந்திரமாக மாற்றப்பட்ட வெகு ஜன மக்களான எம் இனமக்களுக்கு அரசியல் தீர்வை அடைவதற்கான வழிவகைகளை ஆராய்வதோடு நில்லாமல், நிர்வாகத் துறையிலும் தேவேந்திர மக்களின் நேரிடையான பங்களிப்பிற்கு வித்திட வேண்டியதும் அவசியமாகிறது. கன்ஷிராம் ஜி அவர்களின் பாம்செப் என்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அரசு ஊழியர்களின் அமைப்பு தான் பின்னாளில் பகுஜன் சமாஜ் கட்சியாக வளர்ந்து இன்று இந்தியாவின் பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. நிர்வாகத்துறையின் அங்கமான காவல்துறையின் ஈ.எ.ட-யாக பொன்.பரமகுரு என்ற தேவர் இருந்ததன் காரணமாகவே, 400க்கும் மேற்பட்ட பரமகுருவின் சாதியைச் சேர்ந்தவர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் ஆனார்கள் என்பது கடந்த காலம் நமக்கு காட்டும் உண்மை.

என்ன தான் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி நமக்கான சட்டங்களை நாமே இயற்றினாலும், அதை செயல்படுத்துவதற்கான பொறுப்பு நிர்வாகத்துறையிடமே உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிர்வாகத்துறையில் இடம் பெறுவதற்கு கல்வி அறிவு என்பது அவசியமாகிறது. சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த செட்டியார்களுக்கும், பார்பனியர்களுக்கும் தனித்தனியாக பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன என்பதும், சமுதாயத்தில் காமராசர் காலத்திற்கு முன்பு வரை கடை நிலை சமுதாயமாக இருந்த நாடார்களுக்கு கூட அவர்களுக்கென தனியாக கல்வி நிறுவனங்கள் இருக்கிறது என்பதும் தேவேந்திர கல்வியாளர்களும், அரசுத்துறையைச் சார்ந்தோரும் மற்றும் தொழில் முனைவோர்களும் சிந்திக்க வேண்டியதாகும். மேலும், ஒவ்வொரு தேவேந்திர இளைய தலைமுறையும் கல்வி பெறுவதை நிதி உதவி அளித்தோ அல்லது இன்ன பிற உதவிகள் அளித்தோ உறுதி செய்ய வேண்டியது தேவேந்திர கல்வியாளர்கள், அரசுத்துறையைச் சார்ந்தோர் மற்றும் தொழில் முனைவோர்கள் முன் உள்ள கடமையாகும். தேவேந்திர கல்வியாளர்கள் தாம் பெற்ற கல்வியறிவின் மூலம் கடைக்கோடி தேவேந்திரனையும் சென்றடையலாம். அரசுத் துறையைச் சேர்ந்த தேவேந்திரர்கள் அரசின் திட்டங்கள் அனைத்து தேவேந்திர மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு அவர்களுக்கு அரசு ரீதியான உதவிகளை செய்வதோடு நில்லாமல், விரைந்து செய்து கொடுக்க வேண்டும். திட்டங்களைப் பெறுவதில் தாமதமோ, கவனிக்க வேண்டி கட்டாயமோ காட்டக் கூடாது. தேவேந்திர தொழில் முனைவோர்கள் வறுமை நிலையில் உள்ள தேவேந்திர குழந்தைகளை தத்தெடுத்து கல்விக்கான நிதி உதவியை அளிக்கலாம்.

வெந்ததைத் தின்று, வந்த வேலையைச் செய்து, வாழ்க்கையை ஓட்டி, பாரதி சொன்ன "வேடிக்கை மனிதரைப்" போல் இனியும் எம் இன மக்கள் இருத்தல் ஆகாது. ஆகவே நம் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது இன்றைய என்பது காலக் கட்டத்தின் கட்டாயமும் ஆகிறது. அவ்வாறு கல்வி அளிப்பதன் மூலமும், அறிவுப் புரட்சி ஏற்படுத்துவதன் மூலமும் அரசாங்கத்தின் மூன்று தூண்களான அரசு, நிர்வாகம் மற்றும் நீதி ஆகியவற்றின் மொத்தத்தையும் கைப்பற்றலாம். கைப்பற்றுவோமா?


The ballot is stronger than the bullet. அதாவது துப்பாக்கியின் தோட்டாவை விட வாக்குச் சீட்டு அதிக வலிமை வாய்ந்தது. நாம் அளிக்கும் ஓட்டு என்பது நாட்டை ஆள்பவரையும், நம்மை ஆள்பவரையும் தீர்மானிப்பது. வாக்குச் சாவடியில் விரல் நுனியில் வைக்கப்படும் மை கொண்டு தான் ஒவ்வொரு தனிமனிதனின் தலையெழுத்தும் எழுதப்படுகிறது. சுருங்கச் சொன்னால், ஒட்டுச் சீட்டு தனிமனித உரிமையை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு துருப்புச் சீட்டு. அப்படிப்பட்ட வலிமை வாய்ந்த வாக்குகளை தேவேந்திர விரோதப் போக்கை கொள்கையாகவே கடைபிடித்து வரும் திராவிடக் கட்சிகளுக்கு விற்பது என்பது எப்படி எம் இன மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது தான் இப்போது நம் முன் உள்ள கேள்வி. காரணம், இது வரை உதயசூரியனிலோ, இரட்டை இலையிலோ, பம்பரத்திலோ, மாம்பழத்திலோ, முரசிலோ இன்ன பிற சின்னங்களிலோ எம் இன மக்கள் வாக்கு என்பது பாலைவனத்தில் பாய்ச்சிய நீராய் பயனற்று போயிருப்பதையே கடந்த கால வரலாறு காட்டுகிறது.

1967ல் அரியணை ஏறியது முதல் 2006 வரை தேவேந்திர ஓட்டுகளின் பிண்ணனியில் தான் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்கின்றன். கடந்த சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர மக்களில் 55 சகவிகிதத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க-விற்கு வாக்களித்த காரணத்தினால் தான் இன்று கருணாநிதி மாநிலத்தில் முதல் அமைச்சராகவும், மகன் மத்தியில் ரசாயன அமைச்சராகவும் கோலோச்சுகின்றனர். அப்பா கருணாநிதி தன்னை தலித்களின் சம்பந்தி என்று கூறிக் கொண்டு பட்டியல் இன மக்களின் ஓட்டுகளை பதம் பார்க்கிறார் என்றால், மகன் அழகிரியோ தேவேந்திர மக்களிடம் தான் கொண்டுள்ள உறவை சொல்லி ஏமாற்றுகிறார். கடந்த பாரளுமன்றத் தேர்தல் வாக்கு வேட்டையின் போது, தேவேந்திர மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் எல்லாம் தன்னை தேவேந்திரர் வீட்டு மருமகன் எனக் கூறிக் கொண்டு வாக்கு சேர்த்தது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கும் அளவிற்கு அற்புதமான நடிப்பு.

மதுரை பாரளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில், எந்தத் தொகுதி அழகிரிக்கு அதிக வாக்குகள் வாங்கித் தந்ததோ, எந்தத் தொகுதி தேவேந்திர மக்களிடம் "நான் உங்கள் வீட்டு மருமகன், என் அப்பா உங்கள் சம்பந்தி" என்று கபட நாடகம் ஆடி எம் இன மக்களின் வாக்குகளை அறுவடை செய்தாரோ, அதே மேலூர் பகுதியில் உள்ள தேவேந்திரர் ஒருவர் வறுமை காரணமாக மகனுக்கு வேலை வேண்டி கொடுத்த மனு மீது ஆண்டுக்கணக்கில் மெளனம் சாதிக்கிறாராம்! அந்தத் தி.மு.க தேவேந்திரன் நேற்று கட்சியில் சேர்ந்து இன்று காண்டிராக்டர்களாக மாறும் இன்றைய தி.மு.க-காரன் இல்லை. மாறாக, குடும்பத்தை கழகமாக மாற்றிய கருணாநிதிக்கும், அழகிரிக்கும் கழகத்தை குடும்பமாகக் கருதி 31 ஆண்டுகளுக்கும்  மேலாக உழைத்தும், பணியாற்றியும், பல முறை சிறைக்கும் சென்றவர் அந்தத் தி.மு.க தேவேந்திரர். அப்படிப்பட்டவரின் மனு மீது தான் அழகிரி மெளனம் சாதிக்கிறார். காரணம், மனு கொடுத்தவர் ஒரு தேவேந்திரர் என்பதும், தேவேந்திர விரோதப் போக்கு என்பது தி.மு.க தலைவரின் குடும்ப ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்பதும் தான் இதற்கு காரணமாக இருக்க முடியும். மேலும் தேவேந்திர மக்களை வெறும் வாக்கு வங்கியாகவே பார்த்து பழக்கப்பட்ட தி.மு.க-விற்கும், கருணாநிதிக்கும், அழகிரிக்கும் தேவேந்திர மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு அவர்கள் வீட்டு குப்பை தொட்டியில் மட்டும் இடமுண்டு என்ற நிலையில் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது தான். இது எம் இனத்தின் இளைய தலைமுறைக்கு தெரிந்திருக்கும் வேளையில், முதிய தலைமுறை தான் இந்த விஷயத்தில் கொஞ்சம் முரண்பட்டுக் கொண்டிருக்கிறது. இருக்கட்டும், எறும்பு ஊற கல்லும் தேயும் என்கிறது பழமொழி.

சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளில் அறவே புறந்தள்ளப்பட்ட நாடார் சமுதாயம் மேற்சொன்ன அனைத்திலும் இன்று முன்னனியில் நிற்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சியில் வெங்கடேசப் பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டால், அவரின் மனைவியை பாராளுமன்ற உறுப்பினராக்கியதோடு நிற்காமல் மத்திய உள்துறை இணை அமைச்சராக ஆக்கி அழகு பார்க்கும் கருணாநிதி, தேவேந்திர சுரேசுகளை சுட்டுக் கொல்ல உத்தரவிடுகிறார். ஹரிகிருஷ்ணன்கள் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதன் அடையாளமாக உமாசங்கர் ஐ.ஏ.எஸ் இரண்டு ஆட்சிகளிலும் பழிவாங்கும் எண்ணத்தோடு பணியிடைநீக்கம் செய்யப்படுகிறார். ஜெயலலிதா கொடியங்குளத்தை அரங்கேற்றினால், கருணாநிதி மாஞ்சோலையை நிகழ்த்திக் காட்டுகிறார். நாடார் இன மக்களுக்கு இந்த இரண்டு கட்சிகள் உட்பட எல்லா திராவிடக் கட்சிகளும் வக்காலத்து வாங்கும் நிலையில், தேவேந்திர மக்கள் மீதான விரோதப் போக்கைக் தொடர்ந்து கடைபிடித்து அவர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கிறதே. இதற்கு நமது சமூகத்தின் ஒற்றுமையின்மையும், ஓட்டுகளை விற்பதும், உறவைச் சொல்லி ஓட்டு கேட்டு நம்மை ஏமாற்றும் அரசியல்வாதிகளை அடையாளம் காணாமல் முடியாமல் அவர்களை அப்படியே நம்புவதும் தவிர வேறென்ன இருக்க முடியும்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஆட்சி, அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் வரப் போகிறது. கட்சிகளும் அரசியல் சதுரங்கத்தில் காய்களை அழகாக நகர்த்தி வருகின்றன. அழகிரியும் நகர்த்தி வருகிறார். தென்மண்டலத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றி விட வேண்டுமாம். அதற்காக அழகிரியின் கூட்டம் நம்மிடம் பணத்தைக் கொண்டு வரலாம். அல்லது அழகிரியே காந்தி அழகிரியை கூட்டிக் கொண்டு இனத்தைச் சொல்லி வரலாம். ஏமாந்து விடக் கூடாது எம் இன சொந்தங்கள். ஏனெனில் ஒருவன் நம்மை ஒரு முறை ஏமாற்றினால் அவன் மானங்கெட்டவன்; மறு முறையும் நம்மை ஏமாற்றினான் என்றால் நாம் மானங்கெட்டவர்கள். ஆகையால் தேவேந்திரர்கள் இனியும் ஏமாறக் கூடாது. தேவேந்திர ஓட்டுகள் விற்பனைக்கல்ல என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

தேர்தல் ஜீரம் வரும் போதெல்லாம் தேவேந்திர ஓட்டுகளை மருந்தாக்கி கொள்வது என்பது காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் கை வந்த கலையாக இருக்கிறது. ஜெயலலிதா இப்போது எம்.ஜி.ஆர் வியூகத்தை கையில் எடுத்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர் வியூகம் என்பது பட்டியல் இனமக்களின் வாக்குகளை தேர்தலின் போது பயன்படுத்திக் கொள்வது தானே. அதன் ஒரு பகுதியாகத் தானே புதிய தமிழகத்  தலைவருடன் தற்போது உறவாடுகிறார். புநான் பிறந்தது வேறு சமூகமாக இருந்தாலும், வளர்ந்ததும் என்னை வளர்த்ததும் தேவர் சமூகமே. அதனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்குவதில் பெருமையடைகிறேன்பூ என்று சொல்லி ஆதிக்க சாதி வெறியர்களை அரவணைத்துக் கொண்டு, அதே நேரத்தில் தன்னையும் ஒரு ஆதிக்க சாதி வெறியராக அடையாளப்படுத்திக் கொண்ட அதே ஜெயலலிதா தான் இன்று எம்.ஜி.ஆர் வியூகத்தை கையில் எடுத்துக் கொண்டு எம் இன மக்களிடம் தேர்தலின் போது வர இருக்கிறார். புதிய தமிழகத் தலைவரையும் கூட்டிக் கொண்டு வரலாம். அல்லது பணத்தை அள்ளித் தரலாம். ஓட்டுச் சீட்டு என்ன வாரச் சந்தையில் விற்கும் வணிகப் பொருளா, அதை நாம் அவர்களிடம் விற்பதற்கு. அது நம் உரிமைக்கான துருப்புச் சீட்டு.

தேவேந்திர மக்களின் சிந்தனைக்காக ஒரு செய்தி. எட்டு சகவிகித வாக்குகளைக் கொண்ட விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க "குடிகாரன்" என்று சொன்ன ஜெயலலிதாதவும், "சினிமாக்காரன்" என்று சொன்ன ராமதாசும், காங்கிரசும் தூது விடும் நிலையில், 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆறில் ஒருவரை பட்டியல் இன மக்களாகக் கொண்ட தமிழகத்தில், அந்த பட்டியல் இனமக்களிலும் பெரும்பான்மை மக்களாக தேவேந்திர மக்கள் இருக்கும் நிலையிலும் அரசியல் தீண்டாமையை எம் இன மக்கள் அனுபவித்து வருவதற்கு யார் காரணம்? என்ன காரணம்? இத்தனை பெரும்பான்மை மக்களை எல்லா அரசியல் கட்சிகளும் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறதே, ஏன்?

500 ரூபாய்க்கும், 1000 ரூபாய்க்கும் ஓட்டுகளை விற்பது என்பது தேவேந்திர மக்கள் தம் உரிமைகளை விற்பதற்குச் சமம் ஆகும். ஆகையால் நம் இன மக்களுக்கான பொழுது நிச்சயம் விடியும் - அது பகுஜன் சமாஜ் கட்சியால் முடியும் என்ற நம்பிக்கையோடு, "இனி தேவேந்திரர்கள் ஓட்டு விற்பனைக்கல்ல" என்று எழுதி வைப்போம் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும்.

உத்தப்புரம்: தேசிய அவமானச் சின்னம்

தேவேந்திர மக்களை தீண்டாமைச் சுவற்றிற்குள் வைத்து கொண்டு, 'வேற்றுமையில் ஒற்றுமை" என்று இந்திய தேசம் இனியும் பெருமைப் படலாகாது. ஆண்ட வம்சம் அடிமை வம்சமாக்கப்பட்டதன் உச்சக்கட்டம் உத்தப்புரத்தில் தான் ஒரு சேர அரங்கேறியது. தேசத்தின் அவமானச் சின்னமாக விளங்கும் தீண்டாமைச் சுவற்றுக்குள் எம் இன மக்கள் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருவது பற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் எந்த அரசியல் கட்சிகளும் இன்றளவும் குரல் கொடுக்க மறுக்கிறது. "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்பதை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றங்களும், உத்தப்புரம் விசயத்தில் அரசுக்கு உத்தரவிட தயங்குகிறது. ஒரு வேளை "உத்தப்புரத்திற்கான சட்டம்" ஒரு திரையரங்கில் "எழுதப்பட்டதால்" அது தன்னை கட்டுப்படுத்தாது நீதிமன்றங்கள் நினைக்கிறதோ என்னவோ அதுவும் தெரியவில்லை!

எழுமலையில் உள்ள அருணாச்சலம் தியேட்டர்: இங்கு தான் ஆதிக்க சாதி மக்களின் உரிமையை நிலைநாட்ட, தேவேந்திர மக்களுக்கான அடிமை சாசனம் எழுதப்பட்டது. அதியமான், தவமணித் தேவர், கட்டளைச் செல்வம் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், 18 பட்டி நாட்டாமைகள் உட்பட ஆதிக்க சாதி மக்களால் 1989ல் எழுதப்பட்டது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக ஐந்து தேவேந்திரர்களும் அதில் கையெழுத்திட்டனர். அதன் படி, ஏறத்தாழ 650க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட தேவேந்திர மக்கள் வாழும் பகுதியை பிரிப்பதற்கு தீண்டாமைச் சுவர் 350 மீட்டர் (ஏறத்தாழ 1200 அடிக்கும் மேல்) தூரத்திற்கு கட்டப்பட்டது. அதை அப்போது ஆண்ட கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசும் அனுமதித்தது. (நெட்டில் செக்)

காலங்கள் ஓடின. காட்சிகள் தான் மாற வில்லை.  2008ம் ஆண்டு ஆதிக்க சாதியினரின் தீண்டாமை வெறியின் உச்சம், திருவிழாவில் தெரிந்தது. பங்குனி மாத திருவிழாவில் பக்கத்து ஊர் மக்களும் பங்கெடுத்து மகிழ்ந்திருந்த நிலையில் தான், எள் முனை அளவாவது ஈரம் உள்ள எந்த மனிதனும் நினைத்துப் பார்க்க  முடியாத அந்த காட்சி அரங்கேறியது. தீண்டாமைச் சுவற்றின்  மேல் வேயப்பட்டிருந்த கம்பிகளின் மேல் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, தேவேந்திர மக்களின் உயிரை காவு வாங்க தயாராக காத்திருந்தது. திருவிழா கொண்டாங்களில் லயித்திருந்த தேவேந்திர மக்களுக்கு, மின்சார வேலியில் கோழிகள் பறந்து இறந்த போது தான் விஷயம் தெரிய வந்தது. திருவிழாவிற்கு திரண்டிருந்த தேவேந்திர மக்கள் தங்களை தாக்கக்கூடும் என்று ஆதிக்க சாதியினர் அதற்கான காரணமாக கூறியதை அரசும் அமைதியாக ஏற்றுக் கொண்டது!

இந்நிலையில், தேசியத் தலைவர் ஒருவர் தலைமையில் தீண்டாமைச் சுவர் இடிக்கப் போவதாக அறிவிப்பு வந்தது. அது ஒடுக்கப்பட்ட மக்களின் காவலராக தன்னைக் கூறிக் கொள்ளும் கருணாநிதிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. உடனே மதுரை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் தீண்டாமைச் சுவற்றின் பகுதி இடிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. (1989ம் ஆண்டு முதல் தமிழகத்தின் அவமானச் சின்னமாக காட்சியளிக்கும் அந்த தீண்டாமைச் சுவரை இடிக்க அது வரை கருணாந்திக்கு மனம் வராதது ஏன் என தி.மு.க விற்கு ஓட்டு போடும் தேவேந்திரர்கள் தான் சிந்திக்க வேண்டும்.) அரசின் அறிவிப்பு ஆதிக்க சாதியினரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தங்களது குடும்ப அட்டைகளை ஆட்சியரிடம் அளித்து விட்டு தாழையூத்து மலை அடிவாரத்தை ஒட்டிய தோப்பில் குடியேறினர். இதில் கொடுமை என்னவென்றால், எந்த தேவேந்திர மக்களை தீண்டாமைச் சுவற்றிற்குள் வைத்தார்களோ, அதே தேவேந்திர மக்கள் விவசாயம் செய்து வெள்ளாமை வளர்த்த தோப்பிற்குள் தீண்டாமை சுவரை இடிப்பதற்கு எதிராக குடியேறினர்! தீண்டாமை என்பது தேவேந்திரர் வெள்ளாமை செய்த தோப்பில் இல்லையோ!

அரசு பதறியது. சில ஆண்டுகளுக்கு முன் சங்கரன் கோவில் அருகே உள்ள பந்தள்புலி கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் நீதி வேண்டி ஊரை காலி செய்த போது அமைதி காத்த அதே அரசு இயந்திரங்கள், ஆதிக்க சாதியினர் உத்தப்புரத்தை காலி செய்து மலையடிவாரத் தோப்புகளில் தங்கிய போது பதறியது. ஆதிக்க சாதியினரை அமைதிப்படுத்த அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கியது. அதே சமயத்தில், "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நிகழ்வுகளில் மட்டும், பிற்படுத்தப்பட்டோரில் பல பிரிவுகள் இருந்தாலும் ஒன்று சேர்ந்து விடுகின்றனர்" என்ற அண்ணலில் அம்பேத்கரின் கூற்று உத்தப்புரம் விஷயத்திலும் உண்மையானது. பிள்ளைமார் சமூக மக்களுக்கு ஆதரவாக, பிற பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளும் களம் இறங்கின. தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளும் ஆதிக்க சாதியினருக்கு பாராபட்சமின்றி பண உதவி செய்தன. ஒரு வார கால பிள்ளைமார்களின் "வனவாசத்தில்" தேவேந்திர மக்களின் தோப்புகளும், சொத்துகளும் சூறையாடப்பட்டன. ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் வேட்டையாடப்பட்டன. இவைகள் எல்லாம் தேவேந்திர மக்களுக்கு எதிரான ஆதிக்க சாதியினர் அரங்கேற்றிய நிகழ்வுகள் என்பதால் அரசு இயந்திரங்களும் வழக்கம் போல் அமைதி காத்தன.

இதற்கிடையில் 350 மீட்டர் நீளமுள்ள தீண்டாமைச் சுவற்றில் வெறும் நான்கு மீட்டர் சுவர் மட்டும் இடிக்கப்பட்டது. உடனே உத்தப்புரம் உத்தமபுரம் ஆகிவிட்டதாக அறிவித்தார் கருணாநிதி. அதே சமயத்தில் அதே ஊரில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் வழிபடும் உரிமை தேவேந்திர மக்களுக்கு மறுக்கப்படுவதைப் பற்றி மெளனம் சாதிக்கிறார். அங்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற தேவேந்திர மக்களின் கோரிக்கைக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மறுக்கிறது கருணாநிதி தலைமையிலான அரசு. மேலும் பாதிக்கப்பட்ட மக்களான தேவேந்திரர்கள் மீதே வழக்கு பதிவு செய்கிறது கருணாநிதி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை. பின்னர், உத்தப்புரம் சென்ற கிருஷ்ணசாமி தாக்கப்படுகிறார். அதை கண்டித்து இ.கோட்டப்பட்டியில் நடந்த மறியல் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற தேவேந்திர இளைஞர் கொல்லப்படுகிறார்.

அகிம்சா வழியில் நடந்த இந்த மறியல் போராட்டத்தின் போது கருணாநிதி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? அங்கு கலவரமே ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது என ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், கண்ணீர் புகை வீச்சு, தடியடி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுதல், ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்துதல், அதுவும் முழங்காலுக்கு கீழே சுடுதல், தண்ணீர் பீச்சியடித்து கும்பலைக் கலைத்தல் போன்ற படிப்படியான நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தின் வழிமுறைகள் கருணாநிதியின் காவல்துறைக்கு எப்படி தெரியாமல் போனது?துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு போட்டது யார்? தேவேந்திர மக்கள் நீர், நிலைகளில் திரியும் கொக்குகளா, நீங்கள் நினைத்தவுடன் சுட்டுத் தள்ளுவதற்கு? 1989ம் ஆண்டு இரு தரப்பிற்கும் ஏற்பட்ட கலவரத்திலும், காவல்துறையின் துப்பாக்கித் தோட்டாக்கள் இரண்டு தேவேந்திரர்கள் உயிரையே பறித்தது. இது 2008 ஆண்டிலும் தொடர்ந்தது. இனியும் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

அது சரி. ஆட்சி, அதிகாரம் தேவேந்திர மக்கள் கைகளில் வரும் வரை, காவல்துறை துப்பாக்கி தோட்டாக்களுடன், பொய் வழக்குகளும் துரத்தத் தானே செய்யும்! அதற்கு தேவேந்திர மக்கள் அனைவரும் ஒரு கட்சியின் கீழ் ஒன்றினைவதே அதற்கு விடிவாக இருக்க முடியும். சிந்திப்பார்களா எம் இன மக்கள்?

"தீண்டாமையின் வேர் சாதிமுறை; சாதிமுறையின் வேர் வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் மதம்; வருணாசிரமத்தின் வேர் பார்ப்பனியம்; பார்பனியத்தின் வேர் எதேச்சதிகாரம் அல்லது அரசியலதிகாரம்" என்றார் அண்ணல் அம்பேத்கர். அந்த அண்ணலின் எண்ணத்தை இதயத்தில் ஏந்தி, "அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே தலித் மக்களை விடுவிக்கும் வழி" என்ற முழக்கத்தோடு, 1984ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றினைத்து கன்ஷிராம் ஜி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது தான் பகுஜன் சமாஜ் கட்சி. "பெரும்பான்மை மக்களின் கட்சி" என்ற பொருள் கொண்ட இக்கட்சியானது "தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை தொழிலாளர் கூட்டு அமைப்பு" (BAMCEF) மற்றும் Dalit Sochit Samaj Sangursh Samiti (DS4) என்ற இரு அமைப்புகளை ஒருங்கிணைத்து, அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ல் உதயமானது. ஆரம்பிக்கப்பட்ட 11 ஆண்டுகளிலே உத்திரபிரதேசத்தில் ஆளுங்கட்சியாகி சாதனை படைத்தது. 1995 ல் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பகுஜன் சமாஜ், இன்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி புரிகிறது. ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து, ஒடுக்கப்பட்ட இன மக்களில் ஒருவரை முதல் அமைச்சராகக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து பாராளுமன்ற, சட்டமன்றங்களில் குரல் கொடுத்து வரும் ஒரே கட்சி என்பது பகுஜன் சமாஜ் கட்சி என்பதை மனச்சாட்சி உள்ள எவரும் மறுக்க முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, ஆளும் காங்கிரஸ் அரசு காமன்வெல்த் போட்டிகளுக்கு திருப்பி விட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்ததை நாடறியும்.  தேவேந்திரர்களாகிய  நாமும் அறிய வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று தேசிய கட்சியாகவும்,  காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்று சக்தியாகவும் திகழ்ந்து வரும் பகுஜன் சமாஜ் இன்று தேவேந்திர மக்களை தேடி வந்து, அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

திராவிட கட்சிகளுடன், தேசியக் கட்சிகளும் தேவேந்திர மக்கள் மீது அரசியல் தீண்டாமையை திணித்து வரும் நிலையிலும், தேவேந்திர இன மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்த்தும், பயன்படுத்தியும் வரும் வேளையிலும், பகுஜன் சமாஜ் மட்டும் நேசக்கரம் நீட்டி அவர்களின் உரிமைகளுக்கும், அவர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. திராவிடக் கட்சியான தி.மு.க-வின் தேவேந்திர விரோதப் போக்கின் உச்சமாக உமாசங்கர் எனும் ஐ.ஏ.எஸ் அதிகாரியே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போது, தலித் கட்சிகள் என்று கூறிக் கொண்டு தமிழகத்தில் சீட்டுக்கும், ரூபாய் நோட்டுக்கும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தலைவர்கள் மத்தியிலும், கூட்டணிக்கு குந்தகம் விளைந்து விடும் என்ற பயத்திலும் குரல் கொடுக்கத் தயங்கிய தலைவர்கள் மத்தியிலும், பகுஜன் சமாஜ் கட்சி தமிழக அரசின் தேவேந்திர மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து தனது போராட்டத்தை முதலாவதாக பதிவு செய்தது. உமாசங்கர் பணியிடை நீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மதுரை விமான நிலையத்திற்கு தியாகி ஐயா இமானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தும், மதுரையில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது (தேவேந்திர மக்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை). அதே நாளன்று அ.தி.மு.க கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெற்றால் நாங்கள் வெளியேறுவோம் என்று அரசியல் தீண்டாமையை தீர்மானமாக போட்ட பார்வர்டு பிளாக் கட்சியும் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்ட வலியுறுத்தி மதுரை நேதாஜி பூங்காவில் போராட்டம் நடத்தியது. விஷயம் என்னவென்றால், ஓ. பன்னீர் செல்வத்தை தன்னுடை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுத்தபோது "நான் பிறந்தது வேறு சமூகமாக இருந்தாலும், வளர்ந்ததும் என்னை வளர்த்ததும் தேவர் சமூகமே. அதனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்குவதில் பெருமையடைகிறேன்" என்று கூறிய ஜெயலலிதாவின் அ.தி.மு.க மாநில மாணவரணிச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜீ உள்ளிட்டோர் பார்வர்டு பிளாக் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இது தேவேந்திர மக்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு அ.தி.மு.க-வை அரியணையில் ஏற்றத் துடிக்கும் "புதிய தமிழக" அரசியல் கட்சித் தலைவருக்கு தெரியுமா?

உமாசங்கர் பணியிடை நீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் அடுத்த கட்டமாகவும், தேவேந்திர விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடிக்கும் தமிழக அரசை கண்டிக்கும் விதமாகவும், பகுஜன் சமாஜ் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தது. அவற்றில் ஒன்றாக, திரு.உமாசங்கர் அவர்களின் பணியிடை நீக்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டி, மாநில முதன்மைப் பொதுச் செயலாளர் திரு.இ.பா.ஜீவன்குமார் உள்ளிட்ட குழு டில்லிக்கு பயணம் மேற்கொண்டு பகுஜன் சமாஜ் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய பிரமோத் குரில் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தது. இதன் பிண்ணனியில் தான் திரு. உமாசங்கர் அவர்களின் பணியிடை நீக்கம் திரும்பப் பெறப்பட்டு, டான்சி சேர்மனாக நியமிக்கப்பட்டார் என்பது தேவேந்திர மக்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. இத்தனை முயற்சிகளையும் பகுஜன் சமாஜ் மேற்கொண்ட நிலையில், தலித் பெயரைச் சொல்லிக் கொண்டு தமிழகத்தில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் அறிக்கைகள் வெளியிட்டதை தவிர வேறென்ன செய்தன என்பதை தேவேந்திர மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.

திரு.உமாசங்கர் அவர்களின் விவகாரம் ஓய்ந்துள்ள நிலையில் தான், திராவிட கட்சியான தி.மு.க-வின் தேவேந்திர விரோதப் போக்கிற்கு மற்றும் ஒரு சான்றாக வந்திருக்கிறது திரு.முருகன் என்ற நேர்மையான தேவேந்திர
அதிகாரியின் மர்மமான மரணம். தூத்துக்குடி வாணிபக் கழக குடோனில் உதவி தர ஆய்வாளரான திரு.முருகன், அங்கு நடைபெறும் கடத்தல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் புகார் அளித்துள்ள நிலையிலும், நேர்மையான முறையில் செயல்படுவதற்காக தனக்கு பல பக்கங்களிருந்தும் கொலை மிரட்டல் வருவதாக தனது மனைவியிடம் கூறியுள்ள நிலையிலும் தான், அவர் தற்கொலை செய்து கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும், குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், உடலை வாங்க மறுத்து திரு.முருகன் அவர்களின் மனைவி நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி களத்தில் குதித்தது. பகுஜன் சமாஜ்பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய பிரமோத் குரில் அவர்கள் பங்கேற்ற மாபெரும் மனிதச் சங்கிலியையும் தூத்துக்குடியில் சமீபத்தில் நடத்தியது.  உதவித் தொகையாக 25,000 ரூபாயையும் அவர் மனைவியிடம் அளித்தது. இன்றளவும் உண்மை நிலையை கண்டறிய வேண்டி மேலும் பல போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உயிர் நீத்த தியாகி ஐயா இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு, திராவிடக் கட்சித் தலைவர்களும், தேசியக் கட்சி தலைவர்களும் வர மறுக்கும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியச் செயலாளரே, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக தலைவர் மற்றும்  முதன்மைப் பொதுச் செயலாளர் உள்ளிட்டவர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தியதை தேவேந்திரர்கள் என்றும் மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. (இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சிறிய கட்சிகளின் பெயர்களும், அமைப்புகளின் பெயர்களும் அச்சில் ஏறிய போது, பகுஜன் சமாஜ் கட்சியின் பெயர் மட்டும் பத்திரிக்கைகளில் வரவில்லை என்பது தான்.) மேலும், மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளையும் தேவேந்திரர்களுக்கு தந்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், நமக்கான, நமது தலைமையில் அணி வகுப்பதும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதும் தான், தேவேந்திர மக்கள் மீதான அரசியல் தீண்டாமையை விடுவிடுக்கும் வழியாகும் இருக்கும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞாலம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்" என்று பாரதி அன்று பாடியது இன்று தேவேந்திர இன மக்களுக்கு தான் கன கச்சிதமாக பொருந்தியிருக்கிறது போலும். தி.மு.க தேவேந்திரனாக, அ.தி.மு,க தேவேந்திரனாக, ம.தி.மு.க தேவேந்திரனாக, பா.ம.க தேவேந்திரனாக, தே.மு.தி.க தேவேந்திரனாக, காங்கிரஸ் தேவேந்திரனாக மற்றும் திருமாவளவன் தேவேந்திரனாக(!) பிரிந்து கிடக்கும் எம் இனச் சொந்தங்களுக்கு நல்லது எது, நல்ல தலைமை எது, நமக்கான தலைமை எது? என்று தெரிய வேண்டியது அவசியமாகிறது. இந்த அடிப்படை எல்லா தேவேந்திரர்களுக்கும் தெரிந்து விட்டாலே, வேறு எதுவும் அவர்களுக்கு தேவையில்லை தான்.

அரசியல அதிகாரமே ஒரு இனத்தின் உண்மையான விடுதலைக்கு அடிப்படையாக அமைய முடியும் என்பதும், அதுவே சமூக, கல்வி, பொருளாதார காரணிகளில் ஒரு இனத்தை முன்னேற்றமடையச் செய்யும் என்பதும் கடந்த காலம் நமக்கு காட்டும் வரலாறு. கடை நிலைச் சமுதாயமாக இருந்த நாடார் இனம் இன்று அரசியல், பொருளாதார, சமூக நிலைகளில் முதன்மைச் சமூக்மாக முன்னேறியிருப்பதற்கு காமராசர் எனும் நாடார் தமிழ் நாடாண்டார் என்பதே காரணமாக இருக்க முடியும். தென் தமிழகத்தின் சில பகுதிகளிலே கணிசமாக காணப்படும் இம்மக்கள் ஆட்சி, அதிகாரம் உட்பட அனைத்தையும் அனுபவித்து வரும் நிலையில், தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பரவிக் கிடக்கும் பெரும்பான்மைச் சமூகமான தேவேந்த்திர மக்களுக்கு அரசியல் அதிகாரம் மறுக்கப்படுவதன் காரணம் என்ன என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. வினாவிற்கு விடை காண்பதும் காலத்தின் கட்டாயமாகிறது.

ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. 70களில் கீழ் வெண்மணியில் தேவேந்திர மக்களின் மீது பற்ற வைக்கப்பட்ட நெருப்பு, 80களில் உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவராக உருவெடுத்து நிற்கிறது. 90களில் கண்டதேவி தேர், தேவேந்திரர் கை பட்டால் ஓட மறுத்தது, மறுக்கிறது. அரண்மனைகளும், ஜமீன்களும் இன்றளவும் அடக்கியாள நினைக்கிறது. உரிமைக்கு குரல் கொடுத்து போராடினால் காவல்துறையின் தோட்டாக்கள் தேவேந்திர உயிர்களையே குறி வைக்கிறது. நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பணியிடை நீக்கம் பரிசாக வழங்கப்படுகிறது. முருகன் கொலை தற்கொலையாக மாற்றப்படுகிறது. இந்த பட்டியல் இன்னும், இன்றளவும் நீள்கிறது. இதன் எல்லாவற்றிற்கும் தேவேந்திரர்களுக்கான அரசியல் தளமோ, அதிகாரமோ இல்லை என்பது தான் காரணம் என்பதும் தெளிவாகிறது.

இமானுவேல் சேகரன் - அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளச் சின்னம். உரிமைக்கு குரல் கொடுத்ததற்காகவே உயிர் பறித்தது ஆதிக்க சாதி வெறி பிடித்த ஒரு கூட்டம். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக விளங்கிய இந்த தியாகியின் நினைவிடத்திற்கு, எத்தனை முறை கருணாநிதியும், ஸ்டாலினும், அழகிரியும் வ்ந்தனர் என்பதை தி.மு.க தேவேந்திரனும், ஜெயலலிதா எத்தனை முறை வந்தார் என்பதை அ.தி.மு.க தேவேந்திரனும் சிந்திக்க வேண்டும். சிவகங்கை செல்லும் இவர்கள், பரமக்குடியை பார்க்க மறுப்பதேன்? அக்டோபர் 30 அவர்களுக்கு நினைவில் இருக்கும் போது செப்டம்பர் 11 மட்டும் அவர்கள் சிந்தையில் மறப்பது ஏன்? பரமக்குடி தமிழகத்தின் எல்லைக்குள் இல்லையா?

காரணம் ஒன்று தான். தேவேந்திரன் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., காங்கிரஸ் என்றும் பிரிந்தும், சிதறியும் கிடப்பது தான். அனைத்து தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் தேவேந்திரர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்ப்ப்து தான். மேலும் தேவேந்திரர்களுக்கான அரசியல் தளமோ, அதிகாரமோ இல்லை என்பது தான். அதனால் தான் உத்தப்புரத்தில் 500 குடும்பங்களை கொண்ட பிள்ளைமார் சமூகம், 600க்கும் அதிகமான குடும்பங்களை கொண்ட தேவேந்திர இனத்தை தீண்டாமைச் சுவற்றுக்குள் அடக்கி வைத்திருக்கிறது. தம்மிடையே பிளவுகள், பிரிவுகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான எதிரான வன்முறைகளில் மட்டும் அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றினைந்து விடுகின்றனர் என்ற அம்பேத்கரின் உண்மை மொழி உத்தப்புரத்திற்கும் பொருந்தியிருக்கிறது. முதல்வராக உள்ள கருணாநிதியோ உத்தப்புரத்தை உத்தமபுரமாக்குவேன் என்று வாய் ஜாலம் பேசுவதோடு நின்று விடுகிறார். (படிக்க: உத்தப்புரம்: தேவேந்திரரின் அவமானச் சின்னம்). தி.மு,க அமைச்சரவையில் தேவேந்திர இன சமூகத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடமில்லை. அந்த அமைச்சரும் அழகிரிகளின் கட்டுப்பாட்டிலும், மூர்த்திகளின் கண் அசைவிலுமே பணியாற்ற வேண்டியிருக்கிறது.

அருந்ததியினருக்கு மூன்று சதவிகிதம் உள் ஒதுக்கீடு என்பது தேவேந்திர இன மக்களை அரசு வேலைவாய்ப்புகளில் பின் தங்கச் செய்வதற்கான கருணாநிதியின் சூழ்ச்சி என்பது எத்தனை தேவேந்திரருக்குத் தெரியும்? இந்த உள் ஒதுக்கீடு அரசியல் சாசன விதிமுறைகளுக்கு முரணானது என்று தேசிய ஆதிதிராவிட நல ஆணைத்தின் துணைத் தலைவரான காம்ளே கூறினால் உடனே மன்மோகனுக்கு கடிதம் எழுதுகிறார். மன்மோகனும் காம்ளே கருத்திற்கு மெளனம் சாதிக்கிறார். மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும் என்ற தேவேந்திரர்களின் கோரிக்கைக்கு மெளனம் சாதிக்கும் கருணாநிதி, முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முந்தியடித்துக் கொண்டு பரிசீலிப்பதாக சொல்கிறார். மத்திய அரசிற்கு பரிந்துரையும் செய்கிறார். இப்படி செய்வதற்கு தேவேந்திரர்கள் அவருக்கு இளிச்சவாயர்களாகத் தெரிந்திருக்க வேண்டும்!

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அதிகாரி விவகாரத்தில் ஒரு படி மேலே போய் தேவேந்திர இன மக்களுக்கு எதிரான நிலையை எடுத்திருக்கிறார் கருணாநிதி. தலித் கிறிஸ்தவரான உமாசங்கர் தலித் இந்துவாக சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்துள்ளதாக இருபது ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்திருக்கும் கருணாநிதி, அதையே காரணம் காட்டி பணியிடை நீக்கமும் செய்துள்ளார். இந்து ஆதி திராவிட மக்களைப் போன்றே, மதம் மாறிய ஆதி திராவிட மக்களுக்கும் சலுகைகள் வ்ழங்கப்பட வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையாக இருந்து வருகிறது மன்மோகனுக்கும் கடிதம் எழுதுகிறார். ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், உமாசங்கர் ஒரு தலித் கிறிஸ்தவராக இருந்தாலும், அவரை பணியிடை நீக்கம் செய்தது அவர் கழகத்தின் கொள்கைக்கு எதிரானது என்பது எப்படி கருணாநிதிக்கு தெரியாமல் போனது? உமாசங்கர் ஒரு தேவேந்திரர் என்பதால் தெரியாமல் போனதா? இன்று தூத்துக்குடி நுகர்பொருள் வாணிபக் கிடங்கின் தர ஆய்வாளர் (உதவி) முருகன் மர்மான முறையில் இறந்திருப்பதும் இந்த ஆட்சியின் தேவேந்திர விரோதப் போக்கின் அடையாளமாகத் தானே காண முடியும்.

அ.தி.மு.க வைப் பற்றி கவலைப்ப்டத் தேவையில்லை. ஏனெனில் அது கள்ளர் இன மக்களின் கட்சி என்பது ஜெயலலிதா உள்பட அனைவருக்கும் தெரியும். பார்ப்பன கட்சியான பாரதிய ஜனதாவைப் பற்றியும் நமக்கு கவலையில்லை.

கொள்கைக்காக கூட்டணி என்பது போய் கூட்டணி மாறுவதையே கொள்கையாக வைத்துக் கொண்ட ராமதாசின் சாயமும் சமீபத்தில் வெளுத்திருக்கிறது. வன்னியரைத் தவிர எந்த சாதிக்காரனும் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பென்னகரத்தில் வாய்ச் சவடால் பேசிய ராமதாஸ், மதுரை மாவட்டம் மேலூரில் தேவர் இன பாதுகாப்பு பேரவை நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு "முக்குலத்தோருக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்க உறுதுணையாக இருப்பேன்" என்றும் "வரும் சட்டசபை கூட்டத் தொடரில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்படும்:" என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறார். அதே சமயத்தில் வடிவேல் ராவணனை மாநிலப் பொதுச் செய்லாளராக நியமித்து "வடக்கே வன்னியன், தெற்கே தேவேந்திரன்" என்றும் சொல்வார். இப்படி இரட்டை வேடம் போடும் ராமதாஸை தேவேந்திரர்கள் எப்படி நம்ப முடியும் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் சிந்திக்க வேண்டும். தேவரின பாதுகாப்பு பேரவை கூட்டத்திற்கு மேலூர் வரும் ராமதாஸ், தேவேந்திர இன தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு இதுவரை வராதது ஏன்? இதற்கு பா.ம.க தேவேந்திரர்களின் பதில் என்ன?

நேற்றைய் மழையில் இன்று முளைத்த காளான் நாளைக்கே ஆட்சிக்கு வர விரும்புகிறது. அதற்கு தேவேந்திர இளைஞர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. கேப்டன் என தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர், அனைத்து மக்களுக்கான கட்சி தான் தே.மு.தி.க என்று கூறிக் கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கே இவர் கட்சியில் கரிசனம் கிடைக்கும். தேவர் ஜெயந்தி வந்தால் தனது ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் தேவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய விஜயகாந்த், இமானுவேல் சேகரன் படத்திற்கு இதுவரை ஒருமுறை கூட மலர் தூவி மரியாதை செலுத்த வில்லை என்பது எத்தனை தே.மு.தி.க தேவேந்திர இளைஞர்களுக்குத் தெரியும்? ரசிப்பது என்பது வேறு; ஒருவரின் தலைமை ஏற்று நடப்பது வேறு என்பதை எப்போது என் இன சமூக இளைஞர்கள் உணர்வார்கள்?

அனைத்து மக்களுக்கான கட்சி என்று சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் ஆரம்பித்தாலும், அவர் ஒரு நாடார் என்ற காரணத்தினாலே அதன் பின்னர் நாடார் இன மக்கள் அனைவரும் அணி திரளுகினறனர். அதை ஒரு நாடார் கட்சியாக மாற்றுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் அங்கு தேவேந்திர இன மக்களுக்கு வேலை இல்லை.

"சுயமரியாதையுள்ள எவனும் காங்கிரசுடன் ஒத்துழைக்க முடியாது" என்றார் அண்ணல் அம்பேத்கர். தேவேந்திரகள் சுயமரியாதைக்காரர்கள். ஆகையால் அவர்கள் காங்கிரசில் இருத்தல் ஆகாது. காங்கிரசின் முகமூடி தான் அண்ணலின் காலத்திலேயே கிழிந்தாயிற்று. பட்டியல் இன மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, காமன்வெல்த் போட்டிகளுக்கு பயன்படுத்திய காங்கிரசின் போக்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தான். தலித் மக்கள் இன்றி காங்கிரஸ் முழுமை பெற முடியாது என்று தமிழக காங்கிரசில் தனி ஆவர்த்தனம் செய்ய விழையும் சிதம்பரம் கூறுவது தென் பகுதியில் தேவேந்திர இன ஓட்டுகளை குறிவைத்து தான் என்பது அரசியல் அறிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் தேவேந்திரர்கள் சசுயமரியாதைக்காரர்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா?

இரண்டு, மூன்று தொகுதிகளுக்காக இனத்தை அடமானம் வைக்க காத்திருக்கும் இனத் தலைவர்களைப் பற்றியும், கொடியங்குளம் வன்முறைச் சம்பவத்தை நிகழ்த்திய கட்சியுடன் கூட்டணிக்கு விழையும் தலைவர் பற்றியும் எம் இனச் சொந்தங்கள் தான் சிந்திக்க வேண்டும்.

தேவேந்திர இன மக்களிடம் சிறப்பாக நடித்து தொடர்ந்து அவர்களை ஏமாற்றி வரும் கட்சிகளுக்கு ஆஸ்கர் விருது என்று அறிவித்தால் திராவிடக் கட்சிகளோடு, தேசியக் கட்சிகளும் போட்டியிடும். இரண்டு கட்சிகளுமே விருதுகளையும் வெல்லும், தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் தவிர! மேலும் பகுஜன் தலைமையின் கீழ் ஒன்று பட்டால் தேவேந்திரர்களுக்கு உண்டு வாழ்வு. ஏன், எப்படி என்பதை இனி வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.

மள்ளராய் மன்னராய் ஆண்ட இனம் இன்று பள்ளராய், தாழ்த்தப்பட்டோராய் தமிழகத்தில் தரம் தாழ்ந்து கிடக்கிறது. "ஏரும், போரும் எங்கள் வாழ்வே" என  மங்காத புகழொடு வாழ்ந்த மள்ளர் இனம், கல்வி, கலாச்சார,  பொருளாதார காரணிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு  வருகிறது. பெரும்பான்மை சமூகமான மள்ளர் இனத்திற்கு, அரசியல் அதிகாரமோ அறவே மறுக்கப்பட்டு வருகிறது. காலத்தை  பிரதிபலிக்கும் கண்ணாடியான வரலாறோ, இம் இன மக்களின் உண்மையான  வரலாற்றை இருட்டடிப்பு செய்திருக்கிறது. அனைத்திற்கும்  மகுடம் வைத்தாற்போல், பத்திரிக்கை துறையோ இச்சமூகத்தின்  நிகழ்ச்சிகளுக்கும், எழுச்சிகளுக்கும் அதன் பாராமுகத்தையே  தொடர்ந்து பரிசாக தந்து கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 11 - "பாண்டியன்களால்", "சாமியால்", "அண்ணாமலையால்", "ராஜனால்" மற்றும் இன்ன பிற அமைப்புகளால் பிரிந்து கிடக்கும் தேவேந்திர  மக்களை இமானுவேல் சேகரன் எனும் பெயர் இணைக்கும் நாள். உரிமைக்கு குரல் கொடுத்து, ஆதிக்க சாதி வெறிக்கு அடங்க மறுத்து, தன்  இன்னுயிரை இமானுவேல் சேகரன் ஈந்த நாள். அரசியல் மற்றும் பூகோள ரீதியாக சிதறிக் கிடக்கும் எம் இன மக்களை பரமக்குடியில் சேர்க்கும் நாள்.  இத்தனை சிறப்பிற்கும் உரிய இந்த நாளின் நிகழ்ச்சிகள், பத்திரிக்கைத் துறையின் பாராபட்சம் காரணமாக அச்சேற மறுக்கிறது. பத்திரிக்கைத் தர்மம் என்பது பாரபட்சமன்றி செய்திகள் வெளியிடுவது தான் என்பது எப்படி இவர்களுக்கு தெரியாமல் போனது!

செய்திகளுக்கு பத்திரிக்கை என்ற நிலையில் இருந்து விளம்பரத்திற்கு இடையே செய்திகளையும் அதுவும் விளம்பரம் கொடுப்பவர்களின் செய்திகளை மட்டும் பிரசுரிக்கும் அவல நிலைக்கு ஆளாகி உள்ள முன்னனி நாளிதழ்களும், முத்தக்காட்சி செய்திகளுக்கு முதலிடமும், முக்கியத்துவமும் தந்து படத்துடன் செய்தி வெளியிடும் பத்திரிக்கைளும் ஆக்கிரமுத்துள்ள தமிழ் பத்திரிக்கைத் துறை உலகில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்த ஒற்றைக் காரணத்திற்காகவே கொல்லப்பட்ட ஒரு மாவீரனின் நினைவஞ்சலி நிகழ்வுகளை அச்சில் ஏற்றுவதில் இவர்களுக்கு என்ன அவலம் வந்து விடப் போகிறது. நடிகைகள் வழுக்கி விழுவது நான்கு பத்தி செய்திகளாக படத்துடன் பிரசுரிக்கும் நாளிதழ்களுக்கு, ஒரு சுதந்திரப்போராட்ட தியாகியும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியுமான இமானுவேல் சேகரன் நினைவு நாள் செய்திகளுக்கு இரண்டு பத்திகளுக்கு மேல் இடமில்லையா? அல்லது மனமில்லையா? மேலும் "வீடுகள் சூறை" என்றும், "போலீசார் தாக்கப்பட்டனர்" என்றும், "பரமக்குடியில் திடீர் பதட்டம்" என்றும் சொல்லி வைத்தாற் போல் அனைத்து ஏடுகளும் ஒரே மாதிரியாக பதறியிருக்கின்ற்ன. ஆனால் அஞ்சலி செலுத்த சென்ற வாகனங்கள் சில இடங்களில் கல் வீச்சு தாக்குதலுக்கு ஆளான செய்தியை மட்டும் அனைத்து நாளிதழ்களும் வசதியாக மறந்து விட்டன.

தீண்டாமை ஒழிப்பிற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக கூறிக் கொள்ளும் கம்யூனிச பத்திரிக்கையான "தீக்கதிர்", "பாரதி உருவப்படத்திற்கு என். வரதராஜன் மரியாதை" என்ற செய்தியை படத்துடன் நான்கு பத்தி செய்தியாக வெளியிட்டிருக்கும் வேளையில், இமானுவேல் சேகரன் குருபூஜை செய்திகளை முதல் பத்தியிலே முடக்கியது ஏன்? அதுவும் ஆறாம் பக்கத்தில்! இது ஒரு புறம் இருக்க, "விரகனூர் பகுதியில் பேருந்து நிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி" என்றும் "தேவர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு" என்று நடுநிலை நாளிதழ் எனக் கூறிக் கொள்ளும் திணமனி செய்தி வெளியிடுகிறது. இது போன்ற செய்திகள் தேவேந்திர இன மக்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் முயற்சியாக கருதப்படும் என்பது திணமனிக்கு தெரியாதா?

செய்திகள் வெளியிடுவதில் தான் பத்திரிக்கைகளின் பாராபட்சம் தொடர்கிறது என்றால் வெளியிட்ட செய்தியிலும் பாரபட்சம் என்பது தான் வேதனைக்குரியது. தி.மு.க உள்ளிட்ட திராவிடக் கட்சிகளும் புதிய தமிழகம் உள்ளிட்ட தலித் கட்சிகளும் அமைப்புகளும் அஞ்சலி செலுத்தின என சிறிய அளவிலாவது செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள் தேசியக் கட்சியும் உத்திரப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியுமான பகுஜன் சமாஜ் கட்சி அஞ்சலி செலுத்திய செய்தி மட்டும் அனைத்து நாளிதழ்களிலும் இடம் பெறவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை. மற்ற தேசியக் கட்சிகளான காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்களும் பாரதிய ஜனதாவின் மாநிலச் செயலாளரும் அஞ்சலி செலுத்தியதாக செய்தி வெளியிட்டிருக்கும் தினத்தந்திக்கும் தினமலருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியச் செயலர் ஒருவரே நேரில் அஞ்சலி செலுத்தியது தெரியவில்லையா? இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அக்கட்சியின் மாநில முதன்மைப் பொதுச் செயலாளர் திரு.இ.பா. ஜீவன்குமார் தலைமையில் தேசியச் செயலர் திரு. சுரேஷ் மானே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.குறில் மற்றும் தமிழக தலைவர் திரு. ம்ஷ்ட்ராங்க் உள்பட ஆயிரக்கணக்கானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பது தான். அல்லது அவ்வாறு செய்தி வெளியிட்டால் தேவேந்திர சமூக மக்கள் அக்கட்சியின் பின்னால் திரண்டு விடுவார்கள் என்ற எண்ணம் கூட இதற்குப் பின்னால் இருக்கலாம். (அது தான் உண்மையும் கூட.)

"ஏற்றமுறச் செய்வதும், மாற்றமுற வைப்பதும் ஏடேயாகும்" என்பார் பாரதிதாசன். ஆண்டுகள் பல காலமாக அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கும் இந்த இனத்தை ஏற்றமுறச் செய்யாவிடினும், இந்த இனத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் எழுச்சிகளை இருட்டடிப்பு செய்யாமல் இருந்தாலே போதும். அவ்வாறு இருந்தாலே அரசு, நிர்வாகம், மற்றும் நீதி துறைகளுக்கு அடுத்ததாக, நான்காவது தூணாக பத்திரிக்கை துறை திகழ்கிறது என்ற நம்பிக்கையும் நிலைத்திருக்கும்.பத்திரிக்கைத் துறையின் பாராமுகமும், பாரபட்சமும்