twitter
    தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி


ஒரு மாத காலத்தில் தமிழகத்தில் தேர்தல் வரவிருப்பதால், தேர்தல் ஜீரம் திராவிடக் கட்சிகளோடு, தேசியக் கட்சிகளையும் தீவிரமாகவே பற்றிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக்களை பெற்று ஆட்சி அமைப்பதே அவர்களின் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்பதால், அறிவிப்புகளும், நலத்திட்டங்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நம்மைத் தேடி  வந்தன. திருவிழாக்கள், திருமணங்கள் என்று மறைமுகமாக வந்து  கொண்டும் இருக்கின்றன. கண்டுகொள்ளப்படாத கோரிக்கைகளும் தற்போது ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டுகின்றன. அவைகள் கனிவாகவும் கவனிக்கப்படுகின்றன. வித்தியாசங்கள் பார்க்கப்படுவதில்லை. 234 சட்டசபைத் தொகுதிகளிலும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற கனவுடனும், ஆட்சியை அமைத்தே தீர வேண்டும் என்ற வெறியுடனும் ஒவ்வொரு கட்சியும் அரசியல் சதுரங்கத்தில் காய்களை அருமையாக நகர்த்தியும், அந்தந்த தொகுதிகளில் வாழும் பெரும்பான்மை சமூக மக்களை கவரும் விதமாக அதன் இனத் தலைவர்களை வளைத்தும் கொண்டிருக்கின்றன. ஓட்டுக்கும், சில சீட்டுக்கும் தன் இன மக்களின் நலன்களை தாரை வார்க்க அவர்களும் தயாராகவே இருக்கின்றனர்.

  தேவேந்திரர்களின் விசயத்திற்கு வரலாம். ”பள்ளன், குடும்பன், பண்ணாடி” உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ”தேவேந்திர குல வேளாளர்” என அறிவிக்க வேண்டும் பொருட்டு, தொண்டை வறண்டு போகும் அளவிற்கு தொடர்ந்து கத்திய பிறகும் கண்டு கொள்ளாமல் அமைதி காத்த அதே கருணாநிதி,  தற்போது தேர்தல் வருவதால் தானே முந்தியடித்துக் கொண்டு நீதிபதி ஜனார்த்தனன் அவர்களைக் கொண்டு ஒரு நபர் கமிசன் அமைக்கிறார். தேவேந்திரர்களின் வாக்குகளில், தானும், தன் மகனும் ஆட்சியில் அமர்ந்து கொண்டும், பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டும், துப்பாக்கித் தோட்டாக்களை நம் (சுரேசு தேவேந்திரர்) மீது பாய்ச்சிய அதே கருணாநிதி தான், அடுத்த முறையும் ஆட்சிக்கு வர வேண்டி ஒரு நபர் கமிசனை அமைத்து, தொடர்ந்து நம்மை ஏமாற்ற நினைக்கிறார். நரம்பில்லாத நாக்கு நான்கு பக்கமும் திரும்பும் என்ற பழமொழிக்கு உருவகமாக இருப்பதால் தானோ என்னமோ, தேவேந்திர குலத்தின் சம்பந்தி என்று தன்னைத் தானே கூறியதை தற்போது வசதியாக மறந்து விட்டார். சரி, அது கிடக்கட்டும். தேவேந்திர குல வேளாளர்களை, தேவேந்திர குல வேளாளர்கள் என்று அறிவிக்கலாமா என ஆராய(!) கமிசன் அமைத்திருக்கும் கருணாநிதி உத்தரவை காமெடியாக கருதாமல் வேறு எப்படிக் கருத முடியும்.


 நமது வாக்குகளை வளைப்பதில், எதிர்க்கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. எதிர்(ரி)க்கட்சியான அ.தி.மு.க-வும் பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி நமது வாக்குகளை வாங்குவதற்கு திட்டம் தீட்டுகின்றன. ”சாமி” ஏற்கனவே ”இலை” நோக்கி சாய்ந்து விட்ட நிலையில், பாண்டியர்கள் தன்கள் பலங்களை காட்டி இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் நோட்டம் விடுகின்றனர். தேவேந்திர குல மக்களை, தேவேந்திர குல வேளாளர் என அறிவித்தால்(!) பாராட்டு விழா நடத்த ராஜன் தயாராகிறார். ”மலை” மட்டும் மௌனம் காக்கிறது. இது போக தேர்தல் மழையில்  முளைத்த சிறிய தேவேந்திர காளான் கட்சிகளும், அமைப்புகளும் திராவிடக் கட்சிகளின் கரன்சிகளை குறி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் சிலரோ அமைப்புகளை ஆரம்பிக்கும் விதமாக ஆழ்ந்த சிந்தனையில் உள்ளனர்.

இத்தனையும் எதற்கு என்பது நமக்குத் தெரியாத அதே வேளையில், வாக்கு என்பது வலிமையானது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஏனெனில், தேவேந்திரர்கள் வாக்குகள் யாருக்கு பெருமளவில் விழுந்திருக்கிறதோ, அவர்களே ஆட்சி அமைத்திருக்கிறார்கள் என்பது கடந்த கால வரலாறு. இதை ஏதோ எதுகை, மோனைக்காக எழுத வில்லை. பார்ப்பன ஏடான ”தி ஹிந்துவே” கடந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்த காலத்தில் பதிவு செய்த விசயம் இது. வாக்கு என்பது வலிமையானது. அதனால் தான் அண்ணல் அம்பேத்கரும் ”ஒரு மனிதன், ஒரு வாக்கு; ஒரு வாக்கு, ஒரு மதிப்பு” என்று கூறி பட்டதாரிகளுக்கும், பட்டாதாரிகளுக்கும் (ஜமீன்களூக்கும்) மட்டுமே வழங்கபட்ட வாக்குரிமையை, பாமரன் உள்ளிட்ட அனைத்து மக்களும் பெறும் வண்ணம் அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார். அப்படிப்பட்ட விலை மதிப்பில்லாத வாக்குகளை, தேவேந்திர குலத்தை ஆதி திராவிடர் எனும் குறிக்குள் அடைத்து, நம்மை தொடர்ந்து சிறுமைப்படுத்தும் கருணாநிதியின் தி.மு.க-விற்கும், எந்தக் கூட்டம் நமது உரிமை காக்க வேண்டி போராடிய இமானுவேல் சேகரனாரை கொடூரமாக கொலை செய்தததோ அந்தக் கூட்டத்தின் ஆசி பெற்ற அ.தி.மு.க-விற்கும் தான் தேவேந்திர மக்கள் தங்கள் வாக்குகளை தொடர்ந்து அளித்து வருகிறார்கள் என்பது தான் வேதனைக்குரிய விசயம்.


மேலும் இனத் தலைவர்களை நம்புவது என்பது நண்டைச் சுட்டு நரியை காவலுக்கு வைத்த கதையாக மாறிவிட்டது. ஒன்று மட்டும் நிச்சயம். இனியும் தெளிவு பெறாமல் 500-க்கும், 1000 ரூபாய்க்கும் ஓட்டுகளை விற்பதும், வெளுத்தது எல்லாம் பால் என்று எண்ணி இனத் தலைவர்களை நம்பி இனியும் ஏமாறுவது என்பதும் பாடையில் நாமே சென்று படுத்துக் கொள்வதற்குச் சமம். இனியாவது சிந்திக்க வேண்டும் என் இன மக்கள்.



0 comments:

Post a Comment