twitter
    தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி

"தீண்டாமையின் வேர் சாதிமுறை; சாதிமுறையின் வேர் வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் மதம்; வருணாசிரமத்தின் வேர் பார்ப்பனியம்; பார்பனியத்தின் வேர் எதேச்சதிகாரம் அல்லது அரசியலதிகாரம்" என்றார் அண்ணல் அம்பேத்கர். அந்த அண்ணலின் எண்ணத்தை இதயத்தில் ஏந்தி, "அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே தலித் மக்களை விடுவிக்கும் வழி" என்ற முழக்கத்தோடு, 1984ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றினைத்து கன்ஷிராம் ஜி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது தான் பகுஜன் சமாஜ் கட்சி. "பெரும்பான்மை மக்களின் கட்சி" என்ற பொருள் கொண்ட இக்கட்சியானது "தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை தொழிலாளர் கூட்டு அமைப்பு" (BAMCEF) மற்றும் Dalit Sochit Samaj Sangursh Samiti (DS4) என்ற இரு அமைப்புகளை ஒருங்கிணைத்து, அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ல் உதயமானது. ஆரம்பிக்கப்பட்ட 11 ஆண்டுகளிலே உத்திரபிரதேசத்தில் ஆளுங்கட்சியாகி சாதனை படைத்தது. 1995 ல் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பகுஜன் சமாஜ், இன்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி புரிகிறது. ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து, ஒடுக்கப்பட்ட இன மக்களில் ஒருவரை முதல் அமைச்சராகக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து பாராளுமன்ற, சட்டமன்றங்களில் குரல் கொடுத்து வரும் ஒரே கட்சி என்பது பகுஜன் சமாஜ் கட்சி என்பதை மனச்சாட்சி உள்ள எவரும் மறுக்க முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, ஆளும் காங்கிரஸ் அரசு காமன்வெல்த் போட்டிகளுக்கு திருப்பி விட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்ததை நாடறியும்.  தேவேந்திரர்களாகிய  நாமும் அறிய வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று தேசிய கட்சியாகவும்,  காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்று சக்தியாகவும் திகழ்ந்து வரும் பகுஜன் சமாஜ் இன்று தேவேந்திர மக்களை தேடி வந்து, அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

திராவிட கட்சிகளுடன், தேசியக் கட்சிகளும் தேவேந்திர மக்கள் மீது அரசியல் தீண்டாமையை திணித்து வரும் நிலையிலும், தேவேந்திர இன மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்த்தும், பயன்படுத்தியும் வரும் வேளையிலும், பகுஜன் சமாஜ் மட்டும் நேசக்கரம் நீட்டி அவர்களின் உரிமைகளுக்கும், அவர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. திராவிடக் கட்சியான தி.மு.க-வின் தேவேந்திர விரோதப் போக்கின் உச்சமாக உமாசங்கர் எனும் ஐ.ஏ.எஸ் அதிகாரியே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போது, தலித் கட்சிகள் என்று கூறிக் கொண்டு தமிழகத்தில் சீட்டுக்கும், ரூபாய் நோட்டுக்கும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தலைவர்கள் மத்தியிலும், கூட்டணிக்கு குந்தகம் விளைந்து விடும் என்ற பயத்திலும் குரல் கொடுக்கத் தயங்கிய தலைவர்கள் மத்தியிலும், பகுஜன் சமாஜ் கட்சி தமிழக அரசின் தேவேந்திர மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து தனது போராட்டத்தை முதலாவதாக பதிவு செய்தது. உமாசங்கர் பணியிடை நீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மதுரை விமான நிலையத்திற்கு தியாகி ஐயா இமானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தும், மதுரையில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது (தேவேந்திர மக்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை). அதே நாளன்று அ.தி.மு.க கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெற்றால் நாங்கள் வெளியேறுவோம் என்று அரசியல் தீண்டாமையை தீர்மானமாக போட்ட பார்வர்டு பிளாக் கட்சியும் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்ட வலியுறுத்தி மதுரை நேதாஜி பூங்காவில் போராட்டம் நடத்தியது. விஷயம் என்னவென்றால், ஓ. பன்னீர் செல்வத்தை தன்னுடை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுத்தபோது "நான் பிறந்தது வேறு சமூகமாக இருந்தாலும், வளர்ந்ததும் என்னை வளர்த்ததும் தேவர் சமூகமே. அதனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்குவதில் பெருமையடைகிறேன்" என்று கூறிய ஜெயலலிதாவின் அ.தி.மு.க மாநில மாணவரணிச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜீ உள்ளிட்டோர் பார்வர்டு பிளாக் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இது தேவேந்திர மக்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு அ.தி.மு.க-வை அரியணையில் ஏற்றத் துடிக்கும் "புதிய தமிழக" அரசியல் கட்சித் தலைவருக்கு தெரியுமா?

உமாசங்கர் பணியிடை நீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் அடுத்த கட்டமாகவும், தேவேந்திர விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடிக்கும் தமிழக அரசை கண்டிக்கும் விதமாகவும், பகுஜன் சமாஜ் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தது. அவற்றில் ஒன்றாக, திரு.உமாசங்கர் அவர்களின் பணியிடை நீக்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டி, மாநில முதன்மைப் பொதுச் செயலாளர் திரு.இ.பா.ஜீவன்குமார் உள்ளிட்ட குழு டில்லிக்கு பயணம் மேற்கொண்டு பகுஜன் சமாஜ் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய பிரமோத் குரில் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தது. இதன் பிண்ணனியில் தான் திரு. உமாசங்கர் அவர்களின் பணியிடை நீக்கம் திரும்பப் பெறப்பட்டு, டான்சி சேர்மனாக நியமிக்கப்பட்டார் என்பது தேவேந்திர மக்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. இத்தனை முயற்சிகளையும் பகுஜன் சமாஜ் மேற்கொண்ட நிலையில், தலித் பெயரைச் சொல்லிக் கொண்டு தமிழகத்தில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் அறிக்கைகள் வெளியிட்டதை தவிர வேறென்ன செய்தன என்பதை தேவேந்திர மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.

திரு.உமாசங்கர் அவர்களின் விவகாரம் ஓய்ந்துள்ள நிலையில் தான், திராவிட கட்சியான தி.மு.க-வின் தேவேந்திர விரோதப் போக்கிற்கு மற்றும் ஒரு சான்றாக வந்திருக்கிறது திரு.முருகன் என்ற நேர்மையான தேவேந்திர
அதிகாரியின் மர்மமான மரணம். தூத்துக்குடி வாணிபக் கழக குடோனில் உதவி தர ஆய்வாளரான திரு.முருகன், அங்கு நடைபெறும் கடத்தல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் புகார் அளித்துள்ள நிலையிலும், நேர்மையான முறையில் செயல்படுவதற்காக தனக்கு பல பக்கங்களிருந்தும் கொலை மிரட்டல் வருவதாக தனது மனைவியிடம் கூறியுள்ள நிலையிலும் தான், அவர் தற்கொலை செய்து கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும், குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், உடலை வாங்க மறுத்து திரு.முருகன் அவர்களின் மனைவி நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி களத்தில் குதித்தது. பகுஜன் சமாஜ்பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய பிரமோத் குரில் அவர்கள் பங்கேற்ற மாபெரும் மனிதச் சங்கிலியையும் தூத்துக்குடியில் சமீபத்தில் நடத்தியது.  உதவித் தொகையாக 25,000 ரூபாயையும் அவர் மனைவியிடம் அளித்தது. இன்றளவும் உண்மை நிலையை கண்டறிய வேண்டி மேலும் பல போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உயிர் நீத்த தியாகி ஐயா இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு, திராவிடக் கட்சித் தலைவர்களும், தேசியக் கட்சி தலைவர்களும் வர மறுக்கும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியச் செயலாளரே, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக தலைவர் மற்றும்  முதன்மைப் பொதுச் செயலாளர் உள்ளிட்டவர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தியதை தேவேந்திரர்கள் என்றும் மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. (இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சிறிய கட்சிகளின் பெயர்களும், அமைப்புகளின் பெயர்களும் அச்சில் ஏறிய போது, பகுஜன் சமாஜ் கட்சியின் பெயர் மட்டும் பத்திரிக்கைகளில் வரவில்லை என்பது தான்.) மேலும், மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளையும் தேவேந்திரர்களுக்கு தந்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், நமக்கான, நமது தலைமையில் அணி வகுப்பதும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதும் தான், தேவேந்திர மக்கள் மீதான அரசியல் தீண்டாமையை விடுவிடுக்கும் வழியாகும் இருக்கும்.

0 comments:

Post a Comment