twitter
    தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி

உத்தப்புரம்: தேசிய அவமானச் சின்னம்

தேவேந்திர மக்களை தீண்டாமைச் சுவற்றிற்குள் வைத்து கொண்டு, 'வேற்றுமையில் ஒற்றுமை" என்று இந்திய தேசம் இனியும் பெருமைப் படலாகாது. ஆண்ட வம்சம் அடிமை வம்சமாக்கப்பட்டதன் உச்சக்கட்டம் உத்தப்புரத்தில் தான் ஒரு சேர அரங்கேறியது. தேசத்தின் அவமானச் சின்னமாக விளங்கும் தீண்டாமைச் சுவற்றுக்குள் எம் இன மக்கள் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருவது பற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் எந்த அரசியல் கட்சிகளும் இன்றளவும் குரல் கொடுக்க மறுக்கிறது. "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்பதை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றங்களும், உத்தப்புரம் விசயத்தில் அரசுக்கு உத்தரவிட தயங்குகிறது. ஒரு வேளை "உத்தப்புரத்திற்கான சட்டம்" ஒரு திரையரங்கில் "எழுதப்பட்டதால்" அது தன்னை கட்டுப்படுத்தாது நீதிமன்றங்கள் நினைக்கிறதோ என்னவோ அதுவும் தெரியவில்லை!

எழுமலையில் உள்ள அருணாச்சலம் தியேட்டர்: இங்கு தான் ஆதிக்க சாதி மக்களின் உரிமையை நிலைநாட்ட, தேவேந்திர மக்களுக்கான அடிமை சாசனம் எழுதப்பட்டது. அதியமான், தவமணித் தேவர், கட்டளைச் செல்வம் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், 18 பட்டி நாட்டாமைகள் உட்பட ஆதிக்க சாதி மக்களால் 1989ல் எழுதப்பட்டது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக ஐந்து தேவேந்திரர்களும் அதில் கையெழுத்திட்டனர். அதன் படி, ஏறத்தாழ 650க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட தேவேந்திர மக்கள் வாழும் பகுதியை பிரிப்பதற்கு தீண்டாமைச் சுவர் 350 மீட்டர் (ஏறத்தாழ 1200 அடிக்கும் மேல்) தூரத்திற்கு கட்டப்பட்டது. அதை அப்போது ஆண்ட கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசும் அனுமதித்தது. (நெட்டில் செக்)

காலங்கள் ஓடின. காட்சிகள் தான் மாற வில்லை.  2008ம் ஆண்டு ஆதிக்க சாதியினரின் தீண்டாமை வெறியின் உச்சம், திருவிழாவில் தெரிந்தது. பங்குனி மாத திருவிழாவில் பக்கத்து ஊர் மக்களும் பங்கெடுத்து மகிழ்ந்திருந்த நிலையில் தான், எள் முனை அளவாவது ஈரம் உள்ள எந்த மனிதனும் நினைத்துப் பார்க்க  முடியாத அந்த காட்சி அரங்கேறியது. தீண்டாமைச் சுவற்றின்  மேல் வேயப்பட்டிருந்த கம்பிகளின் மேல் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, தேவேந்திர மக்களின் உயிரை காவு வாங்க தயாராக காத்திருந்தது. திருவிழா கொண்டாங்களில் லயித்திருந்த தேவேந்திர மக்களுக்கு, மின்சார வேலியில் கோழிகள் பறந்து இறந்த போது தான் விஷயம் தெரிய வந்தது. திருவிழாவிற்கு திரண்டிருந்த தேவேந்திர மக்கள் தங்களை தாக்கக்கூடும் என்று ஆதிக்க சாதியினர் அதற்கான காரணமாக கூறியதை அரசும் அமைதியாக ஏற்றுக் கொண்டது!

இந்நிலையில், தேசியத் தலைவர் ஒருவர் தலைமையில் தீண்டாமைச் சுவர் இடிக்கப் போவதாக அறிவிப்பு வந்தது. அது ஒடுக்கப்பட்ட மக்களின் காவலராக தன்னைக் கூறிக் கொள்ளும் கருணாநிதிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. உடனே மதுரை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் தீண்டாமைச் சுவற்றின் பகுதி இடிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. (1989ம் ஆண்டு முதல் தமிழகத்தின் அவமானச் சின்னமாக காட்சியளிக்கும் அந்த தீண்டாமைச் சுவரை இடிக்க அது வரை கருணாந்திக்கு மனம் வராதது ஏன் என தி.மு.க விற்கு ஓட்டு போடும் தேவேந்திரர்கள் தான் சிந்திக்க வேண்டும்.) அரசின் அறிவிப்பு ஆதிக்க சாதியினரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தங்களது குடும்ப அட்டைகளை ஆட்சியரிடம் அளித்து விட்டு தாழையூத்து மலை அடிவாரத்தை ஒட்டிய தோப்பில் குடியேறினர். இதில் கொடுமை என்னவென்றால், எந்த தேவேந்திர மக்களை தீண்டாமைச் சுவற்றிற்குள் வைத்தார்களோ, அதே தேவேந்திர மக்கள் விவசாயம் செய்து வெள்ளாமை வளர்த்த தோப்பிற்குள் தீண்டாமை சுவரை இடிப்பதற்கு எதிராக குடியேறினர்! தீண்டாமை என்பது தேவேந்திரர் வெள்ளாமை செய்த தோப்பில் இல்லையோ!

அரசு பதறியது. சில ஆண்டுகளுக்கு முன் சங்கரன் கோவில் அருகே உள்ள பந்தள்புலி கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் நீதி வேண்டி ஊரை காலி செய்த போது அமைதி காத்த அதே அரசு இயந்திரங்கள், ஆதிக்க சாதியினர் உத்தப்புரத்தை காலி செய்து மலையடிவாரத் தோப்புகளில் தங்கிய போது பதறியது. ஆதிக்க சாதியினரை அமைதிப்படுத்த அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கியது. அதே சமயத்தில், "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நிகழ்வுகளில் மட்டும், பிற்படுத்தப்பட்டோரில் பல பிரிவுகள் இருந்தாலும் ஒன்று சேர்ந்து விடுகின்றனர்" என்ற அண்ணலில் அம்பேத்கரின் கூற்று உத்தப்புரம் விஷயத்திலும் உண்மையானது. பிள்ளைமார் சமூக மக்களுக்கு ஆதரவாக, பிற பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளும் களம் இறங்கின. தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளும் ஆதிக்க சாதியினருக்கு பாராபட்சமின்றி பண உதவி செய்தன. ஒரு வார கால பிள்ளைமார்களின் "வனவாசத்தில்" தேவேந்திர மக்களின் தோப்புகளும், சொத்துகளும் சூறையாடப்பட்டன. ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் வேட்டையாடப்பட்டன. இவைகள் எல்லாம் தேவேந்திர மக்களுக்கு எதிரான ஆதிக்க சாதியினர் அரங்கேற்றிய நிகழ்வுகள் என்பதால் அரசு இயந்திரங்களும் வழக்கம் போல் அமைதி காத்தன.

இதற்கிடையில் 350 மீட்டர் நீளமுள்ள தீண்டாமைச் சுவற்றில் வெறும் நான்கு மீட்டர் சுவர் மட்டும் இடிக்கப்பட்டது. உடனே உத்தப்புரம் உத்தமபுரம் ஆகிவிட்டதாக அறிவித்தார் கருணாநிதி. அதே சமயத்தில் அதே ஊரில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் வழிபடும் உரிமை தேவேந்திர மக்களுக்கு மறுக்கப்படுவதைப் பற்றி மெளனம் சாதிக்கிறார். அங்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற தேவேந்திர மக்களின் கோரிக்கைக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மறுக்கிறது கருணாநிதி தலைமையிலான அரசு. மேலும் பாதிக்கப்பட்ட மக்களான தேவேந்திரர்கள் மீதே வழக்கு பதிவு செய்கிறது கருணாநிதி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை. பின்னர், உத்தப்புரம் சென்ற கிருஷ்ணசாமி தாக்கப்படுகிறார். அதை கண்டித்து இ.கோட்டப்பட்டியில் நடந்த மறியல் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற தேவேந்திர இளைஞர் கொல்லப்படுகிறார்.

அகிம்சா வழியில் நடந்த இந்த மறியல் போராட்டத்தின் போது கருணாநிதி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? அங்கு கலவரமே ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது என ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், கண்ணீர் புகை வீச்சு, தடியடி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுதல், ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்துதல், அதுவும் முழங்காலுக்கு கீழே சுடுதல், தண்ணீர் பீச்சியடித்து கும்பலைக் கலைத்தல் போன்ற படிப்படியான நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தின் வழிமுறைகள் கருணாநிதியின் காவல்துறைக்கு எப்படி தெரியாமல் போனது?துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு போட்டது யார்? தேவேந்திர மக்கள் நீர், நிலைகளில் திரியும் கொக்குகளா, நீங்கள் நினைத்தவுடன் சுட்டுத் தள்ளுவதற்கு? 1989ம் ஆண்டு இரு தரப்பிற்கும் ஏற்பட்ட கலவரத்திலும், காவல்துறையின் துப்பாக்கித் தோட்டாக்கள் இரண்டு தேவேந்திரர்கள் உயிரையே பறித்தது. இது 2008 ஆண்டிலும் தொடர்ந்தது. இனியும் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

அது சரி. ஆட்சி, அதிகாரம் தேவேந்திர மக்கள் கைகளில் வரும் வரை, காவல்துறை துப்பாக்கி தோட்டாக்களுடன், பொய் வழக்குகளும் துரத்தத் தானே செய்யும்! அதற்கு தேவேந்திர மக்கள் அனைவரும் ஒரு கட்சியின் கீழ் ஒன்றினைவதே அதற்கு விடிவாக இருக்க முடியும். சிந்திப்பார்களா எம் இன மக்கள்?

0 comments:

Post a Comment