twitter
    தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி

"பட்டியல் இன மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறிக் கொள்ளும் தமிழக அரசால், அத்திட்டங்கள் எப்படி பயன்படுத்தப்பட்டது. எவ்வளவு பேர் பயன் பெற்றனர் போன்ற புள்ளி விவரங்களைத் தர முடியவில்லை. அரசு ஊழியர்களில் பட்டியல் இன மக்கள் எத்தனை பேர், எத்தனை பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது, காலியிடங்கள் எத்தனை, பள்ளி, கல்லூரிகளில் என்ன நிலை என்ற விவரங்களும் மாவட்ட வாரியாகவோ, துறை ரீதியாகவோ இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பணியாளர் சங்கம் மற்றும் அரசுக்குமிடையே கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தொடர்பு அதிகாரி இருப்பார். அது போன்று அதிகாரி இங்கு இல்லாததால், தகவல் பரிமாற்றம் சரியாக இல்லை என்று கருதுகிறேன். பிற மக்கள் ஆக்கிரமித்துள்ள இடங்கள் தான் பல இடங்களில் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்பது தொடர்பாக 8 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன." - இப்படிக் கூறியது கூலி வேலையை பிழைப்பாகக் கொண்ட குப்பனோ, சுப்பனோ அல்ல. பட்டியல் இனமக்களுக்கான நலத்துறையின் துணைத்தலைவரான திரு.காம்ளே அவர்களே, கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசின் மீதான குற்றச்சாட்டு தான் மேற்கூறியது.

1982ம் ஆண்டு லண்டன் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் பட்டியல் இனமக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில், தமிழக அரசின் நில நிர்வாகத்துறை ஆணையர் வெளியிட்ட ஆவணங்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் தற்போது வெறும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 111 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 10 லட்சத்து 73 ஆயிரத்து 887 ஏக்கர் நிலம் எங்கே போனது? என்ன ஆனது?  தற்போது ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த தலித்களின் சம்பந்தி இந்த விஷயத்தில் இது வரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டது என்றால் மட்டுமே விசாரணைக்கமிஷன் அமைப்பாரோ இந்த தலித்களின் சம்பந்தி? மேலும், இந்த தலித்களின் சம்பந்தியின் ஆட்சியில் தான், வேலியே பயிரை மேய்ந்தது போல, பஞ்சமி நிலங்களை ஆர்ஜிதம் செய்யக்கூடாது என்ற விதியை மீறி அரசே பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமித்துள்ளது. அது சரி, ஆட்சி அதிகாரம் நம் கைகளில் வரும் வரை, இதை விதியென்று நொந்து கொள்வதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்.

குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, மாநில முதல்வரை தலைவராகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கென்றே தனியாக ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற நிலையில், தலித்களின் சம்பந்தியான கருணாநிதி ஆட்சி புரியும் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மட்டுமே தனியாக நீதிமன்றங்கள் அமைந்துள்ளன என்ற விஷயம் எப்படி அவருக்கு தெரியாமல் போனது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பெயரைச் சொல்லி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்து, தன்னை பெரியாரின் பிள்ளை என்றும், அண்ணாவின் தம்பி என்றும் கூறிக் கொள்ளும் இந்த தலித் சம்பந்தியின் ஆட்சியில் தான், வன்கொடுமை நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் ஐந்தாவது இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தான், "வன்கொடுமை வழக்குகளில், தண்டனை விகிதம் மிகக் குறைவாக உள்ளது. தமிழகத்தில் இதற்கென சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்" என்ற பட்டியல் இனமக்களுக்கான நலத்துறையின் துணைத்தலைவரான திரு.காம்ளே அவர்களின் வேண்டுகோளும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே கருணாநிதி காதில் விழுந்திருக்கிறது. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை கனிவோடு பரிசீலிக்கும் கருணாநிதிக்கு, திரு. காம்ளே அவர்களின் வேண்டுகோள் மட்டும் எட்டிக்காயாய் கசப்பது ஏனோ? கம்யூனிஸ்டுகள் குற்றச்சாட்டுக்களுக்கு மேற்குவங்காளம், கேரளா போன்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு உடனடியாக புள்ளி விவரங்களை இந்த "தலித் சம்பந்தியான" கருணாநிதி, திரு.காம்ளே அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அளித்த பதில் என்ன? தேவேந்திர விரோதப் போக்கு என்பது தானே திராவிடக் கட்சிகளின் இது நாள் வரை கொள்கையாக இருந்து வருகிறது. அ.தி.மு.க தேவேந்திர மக்களுக்கு எதிரி என்றால், தி.மு.க-வின் கருணாநிதி எம் இன மக்களின் துரோகி என்ற வித்தியாசத்தை தவிர வேறொன்றுமில்லை.

பட்டியல் இன மக்களிடையே பகையை உண்டாக்கவும், தேவேந்திர மக்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கும் விதமாகவும் தானே அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை, பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பெயர் பெற்ற கருணாநிதி தற்போது எடுத்திருக்கிறார். இது தி.மு.க கரை வேட்டி அணிந்த எத்தனை தேவேந்திர கைத்தடிக்களுக்குத் தெரியும்? ஐம்பதாயிரம் மக்களுக்கும் குறைவான கருணாநிதியின் சமூகம் இன்று ஆண்டு கொண்டு, எண்ணிக்கையில் கோடியைத் தொடும் எம் இனமக்களை அடிமைப்படுத்தி, தேவேந்திர விரோதப்போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருகிறது என்று சொன்னால் அதற்கு தி.மு.க-விற்கு வாக்களிக்கும் தேவேந்திர மக்களின் பங்கும் அதில் இருக்கிறது என்பது தானே உண்மை. எட்டு சகவிகத ஓட்டுகளைக் கொண்ட விஜயகாந்த் ஆட்சி அமைக்க முயற்சிக்கும் போது, ஏறத்தாழ இருபது சகவிகித மக்கள் தொகையைக் கொண்ட தேவேந்திர இனம் இன்றளவும் ஆட்சி அமைக்க முடியாமல் போவதற்கு, எம் இனச் சொந்தங்கள் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் தொடர்ந்து வாக்களிப்பது தானே காரணமாக இருக்க முடியும்.

தி.மு.க-வின் தேவேந்திர விரோதப் போக்கின் மற்றொரு அடையாளமாக தூத்துக்குடியின் திரு.முருகன் அவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்ட போது அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சித்த நிலையில், உத்திரப்பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் திரு.பிரமோத் குரில் அவர்கள் நேரில் வந்து துக்கத்தில் பங்கெடுத்து திருமதி.செல்விக்கு ஆறுதல் கூறியது திரு.பிரமோத் குரில் உட்பட நாம் அனைவரும் அம்பேத்கரின் மக்கள் என்ற அடிப்படையில் தானே. உயர்நிலைப் பதவியில் உள்ள திரு.உமாசங்கர் அவர்களே தேவேந்திரர் என்ற காரணத்தால் திராவிடக் கட்சியான தி.மு.க-வால் பழிவாங்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து , பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பத் தயாரானதும், திரு.உமாசங்கர் அவர்களும் அம்பேத்கரின் மக்கள் என்ற அடையாளத்தைக் கொண்டவர் என்ற அடிப்படையில் தான். இனத்தின் பெயரைச் சொல்லி வாக்கு வாங்கி தேர்தலில் வெற்றி பெற்ற திராவிடக் கட்சிகளின் எத்தனை தேவேந்திர குல சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.உமாசங்கர் அவர்களின் பணியிடை நீக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்? அவர்களில் எத்தனை பேர் திருமதி.செல்விக்கு ஆறுதல் கூறவாவது தூத்துக்குடிக்கு வந்தனர்? இதை திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் தேவேந்திர சொந்தங்கள் தான் சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா?

0 comments:

Post a Comment